Wednesday 29 July 2009

நீங்கள் ஒரு பின்நவீனத்துவவாதியா? ஒரு சிறு தேர்வு


வெகுநாட்களாக தமிழ்மணத்தில் சுற்றிவரும் நீங்கள் பின்நவீனத்துவவாதியா என்று ஒரு கேள்வி இருந்தால், கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.
1. பின்நவீனத்துவம் என்றால் நவீன முறையில் 'பின் ஊக்கு' தயாரிக்கும் முறை என்று நினைக்கிறீர்களா?
2. சில பதிவுகளைப் படித்தபின், சுத்தமான தமிழில் எழுதியிருக்கிறார்கள் என்பது தெரிந்தாலும் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று புரியாமல் குழம்பியிருக்கிறீர்களா?
3. அப்படிப்பட்ட பதிவுகளுக்குப் போடப்படும் பின்னூட்டங்களும் உங்களுக்குப் புரிவதில்லையா?
4. ஒரு கவிதைக்கான பின்னூட்டத்தில் 'கவுஜ' என்று எழுதி மறு பின்னூட்டத்தில் திட்டு வாங்கியிருக்கிறீர்களா?
5. இருபது வரியில் இடுகை போடவே நாக்கு தள்ளும்போது இவர்களெல்லாம் எப்படி இரண்டாயிரம் வரியில் பதிவிடுகிறார்கள் என்று வியந்ததுண்டா?
6. இயல்பியல் என்ற சொல்லை Physics என்று மொழி பெயர்க்கிறீர்களா?
7. ஒரு சில பதிவர்களில் கீ போர்டில் iyal, isam என்ற எழுத்துகள் மட்டும் அடிக்கடி பழுதடைவது ஏன் என்று தங்களுக்கு புரியாமல் விழித்ததுண்டா?
8. சுப்பிரமணியபுரம் போன்ற படங்களை பார்த்தபின் "கலையியலின் பகுதியான திரையியலின் படைப்பாக வெளியாகியிருக்கும் சுப்பிரமணியபுரத்தில் அதன் படைப்பாளி பொருளாதாரவியலை அடிப்படையாகக் கொண்ட சமூகவியலின் பேதங்களை சாடுவது நம்..." என்று எழுதாமல் "இயக்குநர் இயல்பாக கதையை நகர்த்துகிறார்" என்று எழுதுகிறீர்களா?
9. முற்றுப்புள்ளியே இல்லாமல் ஐநூறு வார்த்தைகளுடன் ஒரு வாக்கியம் எழுதுவது சாத்தியமே இல்லை என்று சத்தியமாக நம்புகிறீர்களா?
10. "இயல்பாக" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இயல்" என்ற சொல்லையும், "இசக்கிமுத்து" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இச" என்ற எழுத்துகளையும் உபயோகிப்பதில்லையா?
தேர்வு முடிவுகள்: நீங்கள் ஏழுக்கும் மேல் 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், பொழச்சி போங்க. உங்கள இன்னும் பின்நவீனத்துவ கிருமி கடிக்கவே இல்லை.
நீங்கள் மூன்றிலிருந்து ஆறு கேள்விகளுக்கு 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், நீங்கள் பின்நவீனத்துவவாதியாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். தடுப்பு மருந்தாக தமிழ்மணத்தில் நகைச்சுவை, மொக்கை என்ற லேபிளுடன் வரும் இடுகைகளை ஒரு மண்டலத்திற்கு படித்து வரவும். மூன்றிற்கும் குறைவாக என்றால் உங்களுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்..."இருத்தலியலின் முக்கியப் பகுதியான நகைச்சுவையியல் மற்றும் பகடியிசத்தின் இலக்கியமாக இந்த இடுகை தமிழ் வலையுலகில் பதியப்படுகிறது என்பது தங்கள் புரிதலியலுக்கு... ...


நன்றி - சாளரம்

No comments: