Thursday, 13 August 2009

நரகல் சுவையை நாய்தான் விரும்பும்


நரகல் சுவையை நாய்தான் விரும்பும்
நல்ல மக்கள் விரும்புவ துண்டோ?
நரகல் குழியில் புழுக்கள் மகிழும்
நல்ல மக்கள் மகிழ்வ துண்டோ?

நறவமே பூதொறும் தேடும் தேனீ
நரகலே யாதிலும் தேடும் பீயீ
உருவமும் உணர்ச்சியும் உண்பது போலே
உண்டா குமென்கிறேன் உண்மையி னாலே!

பொறுப்பில் லாத இலக்கியப் போக்கு
பொறுக்கித் தனத்தில் புழுத்த புழுப்பு
நெருப்பில் இல்லை விலக்கிய நோக்கு
நெருப்பைக் கொள்பவர்க் குள்ளது பொறுப்பு

நெருப்பில் போல இலக்கிய ஆக்கம்
நெருப்பில் இல்லை அழுக்கின் தாக்கம்
உறுப்பில் உணர்ச்சியில் உள்ளவை ஆக்கம்
பொறுப்பு டையார்க்(கு) அறந்தரும் நோக்கம்

அன்பெனும் அகத்தின் உறுப்பில் பூக்கும்
ஆண்பெண் அருமையைக் கட்டிக் காக்கும்
பண்பெனும் பொதுமையில் அனைத்தையும் சேர்க்கும்
பயனெனும் விளைவினில் பதம்பல சீர்க்கும்

அகமெனப் படுவது மறைநிலை யுடையது
ஆண்பெண் தனிநிலை உறவினில் அடைவது
புறமெனப் படுவது பொதுநிலை யுடையது
புகழ்பட அனைவரும் செயல்வளம் முடைவது


நன்றி : தமிழியல் ஆய்வுக் களம்

3 comments:

கோவி.மதிவரன் said...

வணக்கம் வாழ்க தமிழ்

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

தொடருங்கள்

சுப.நற்குணன்,மலேசியா. said...

//நரகல் சுவையை நாய்தான் விரும்பும்
நல்ல மக்கள் விரும்புவ துண்டோ?
நரகல் குழியில் புழுக்கள் மகிழும்
நல்ல மக்கள் மகிழ்வ துண்டோ?//

உண்மை..! உண்மை..!

நவின இலக்கியத்தை; நவின கவிதையை; அதிநவின எழுத்தை.. மக்கள் விரும்புகிறார்களாம்.. இளையோர் நேசிக்கிறார்களாம்.. பாமரன் படிக்கிறானாம்..!!

மூளைக்கோளாறு ஏதும் உள்ளவர்கள் நம்பிக்கொள்ளட்டும்! ஆனால்,

பண்பாளர்கள், மாந்த நாகரிகம் தெரிந்தவர்கள், இலக்கண இலக்கியப் பின்புலம் கொண்டவர்கள், மரபியல் அறிந்தவர்கள்.. கண்டிப்பாக இந்த நரகல் இலக்கியத்தைச் சீண்டியும் பாரார்..!

//பொறுப்பில் லாத இலக்கியப் போக்கு
பொறுக்கித் தனத்தில் புழுத்த புழுப்பு//

இதைத்தான் பாவலரேறு 'புலையர் புகுந்த புழுக்கறை உலகம்' என்றார்.

நல்ல கவிதைக்கு நயமான நன்றி!

தமிழரண் said...

ஐயா, கோவி. மதிவரன், சுப.நற்குணன் ஆகியோர் தொடர்ந்து கருத்துமேடைக்கு வந்து நல்ல கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் கூறிவருவதற்கு மிக்க நன்றி. தொடர்ந்து வருக.


'புலையர் புகுந்த புழுக்கறை உலகம்'

உண்மை இது! முற்றிலும் உண்மை! சில புத்திலக்கியவாணர்கள் புகுந்த புழுக்கறை உலகமே இன்றைய 'தீவிர நவின இலக்கியம்'

நன்றி.