Friday 6 November 2009

மலேசிய இலக்கியத்திற்கு இழிவை ஏற்படுத்தாதீர்!!

மலேசிய இலக்கியதிற்கு இழிவை ஏற்படுத்தும் வேலையை நிறுதிக்கொள்ள வேண்டுமென மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு. இராஜேந்திரன் அவர்கள் குறிப்பிட்ட சில மலேசிய எழுத்தாளர்களை அறிவுறுத்தினார். கடந்த திங்களில் மலேசியப் ‘பெர்னாமா’ செய்தி அலைவரியின் நேர்காணலில் இவ்வாறு அவர் கூறினார்.


ஒரு குறிப்பிட்ட சிறு குழுவினர் 'பின்நவீனத்துவம் யதார்த்தம்' எனும் போர்வையில் பண்பாட்டிற்கு ஒவ்வாதவற்றைப் படைப்பாக எழுதி, மலேசிய இலக்கியத்திற்கு இழிவை ஏற்படுத்துகின்றனர். இக்குழு 5,6 பேர்களைக் கொண்டதுதான் என்றார். எப்படி ஒரு ‘நீலப்படம் குடும்பத்திற்கு ஒவ்வாதோ அதே போன்றுதான் இவர்களின் படைப்பும் என்றார். ஒரு நீலப் படத்தைப் பார்ப்பதுபோல் இவர்களின் படைப்பு உள்ளது என மனம் குமுறினார். இவ்வாறு எழுதிவிட்டு பின் மலேசிய எழுத்தாளர் சங்கத்தினடமிருந்து எந்த ஆதரைவையும் எதிர்ப்பார்க்க வேண்டாம் எனவும் அறிவுருத்தினார்.


அதோடு இவர்களுக்கு ஏதும் பரிசுகள் வழங்கினால் அதை வேண்டாம் என்பார்களாம். சரி, வேறு யாருக்காவது இப்பரிசுகளை வழங்கினால் ‘அவருக்கு என்ன தகுதி இருக்கின்றது அவர்களுக்குப் போய்ப் பரிசு கொடுக்கிறார்கள் என்று இந்தக் குழு குறை கூறுகின்றனர்களாம். இவர்களைப் போக்கை வைரமுத்துவின் கவிதை வரிகளொடு மேற்கோள் காட்டினார். பின்வருமாறு


‘அப்படிச் செய்தால் அதுவும் தப்பு

இப்படிச் செய்தால் இதுவும் தப்பு

கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்

தன்நிழலை பார்த்துத் தானெ கத்தும்.


இவர்களை நாய்கள் என்று சொல்லாமல் சொல்வதுபோல்தான் உள்ளது. மலேசிய இலக்கியத்திற்குப் பெருமை சேர்த்தவர்கள் புகழ் சேர்த்தவர்கள் என வரலாறு மலேசியாவிற்கு உணடு. ஆனால் தற்காலத்தில் மலேசியா இலக்கியத்திற்கு இழிவை ஏற்படுத்தியவர்கள் என ஒரு பட்டியலை வரலாறு கூறும் என நினைக்கின்றேன். இவர்களின் படைப்பில் அவ்வளவு பண்பழிப்பு (ஆபாசம்), பண்பாடு, மரபு, வாழ்க்கை நல்லொழுக்கம் ஆகியவற்றைப் பற்றித் தெரியாமல் எதை எதையோ எழுதி தள்ளுகிறார்கள். பின்நவீனத்துவம் எனக்கூறி கடவுளை இழிவை ஏற்படுத்துவது, வாழ்க்கை ஒழுக்கங்களைத் தகர்த்தெறியவது, மரபுகளைக் கேலி செய்வது, பண்பாடுகளை மீறுவது ஆகியவற்றை இவர்களின் படைப்புகளில் இயல்பாகக் காணலாம். எழுத்து ஏந்துகளும்(வசதி) அச்சிடும் ஏந்துகளும் பல்கிவிட்ட இன்றைய சூழல்களில் கழுதை கூட புத்தகம் வெளியீடும் என வேடிக்கையாகச் சொல்வார்கள்.


அதனால் புத்தகத்தில் ஏறிவிட்டதால் இதுதான் மலேசிய இலக்கியங்கள் என்று யாரும் எண்ணிவிடாதீர்கள். புத்தகத்தில் வந்துவிட்டது, மாதிகைகளில் வந்துவிட்டது, சிற்றிதழ்களில் வந்துவிட்டது, வலைபதிவில் வந்துவிட்டது, நாளிகையில் வந்துவிட்டது என எண்ணி மலேசிய இலக்கியங்கள் இவ்வளவு இழிவாகிவிட்டது என யாரும் எண்ணிவிட வேண்டாம். இவர்கள் ஒரு சிறு குழுவினரே. ஏதோ அரைகுறை தமிழறிவு இருப்பதால் இப்படிச் செய்கின்றனர்.


மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவரே இவ்வாறு குறிப்பிட்டுச் சொல்வதால் இச்செய்தி சற்று எல்லாரும் கவனத்தில் நிறுதிக்கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன். ஏற்கனவே இழிவு குழுமத்தில் ஒரு நவின படைப்பை எடுத்துச் சுட்டியுள்ளேன். அதன் பிறகு நிறைய அன்பர்கள் பல இழிவு படைப்புகளையும் தமிழரணுக்கு அனுப்பி வைத்தனர். மலேசிய இலக்கியத்தின் நன்மதிப்பைக் கருத்தில் கொண்டே அதனை நான் வெளியீடவில்லை.


மலேசிய எழுத்தளார் சங்கத்தின் தலைவர் இவ்வாறு அறிவுறுத்திறுப்பது தக்க நேரத்தில் தமது கடமையை செய்வன செய்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. மலேசிய இலக்கியத்தின் மேல் அவர்கொண்டிருக்கும் அக்கறையும் கடமையுணர்வும் போற்றதற்குரியது. மானமுள்ள தமிழர்களின் சார்பில் அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

8 comments:

மனோவியம் said...

தரம் தாழ்ந்த வார்த்தைகளையும் கருத்துக்களையும் அவர்களின் எழுத்தோவியங்களில் எடுத்து இயம்புவது என்பது பண்பாடு அற்றச் செயலாகத்தான் இருக்கும்.இனிய கனி இருக்கும் பொழுது காய்களை உண்பதற்க்கு ஒப்பாகும்.பண்பாடுகள் அவர்களின் அகத்தின் மேன்மையை சொல்லும்..தூய அகத்தின் எண்ணங்களில்யிருந்து வெளிப்ப்டும் நல்ல வார்த்தைகள் இனிய இலக்கியமாகும். தவறான நோக்கோடு விமர்ச்சிக்கப்டும் வார்த்தைகள் கூட் பண்பாட்டுக்கூறுகளை மீறாத வகையில் இருந்தால் போற்றப்ப்டும்.இலக்கிய நயம் மிகுந்திருக்கும் போது இனிமையாக இருக்கும் சில வார்த்தைகள் சகட்டு மேனியாய் உபயோகப்டுத்தும் சாக்கடையாய் தோன்றும். அனைத்தும் தமிழ் வார்த்தைகள் தான்.ஆனால் இடம் பொருள் ஏவல் என்பது போல் எங்கு உள்வாங்க ப்டுகிறது என்பது அதி முக்கியமான ஓன்று ஐயா.பள்ளி அறைப் பாடங்களை பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்க முடியுமா? இயன்ற அளவுக்கு இனியத் தமிழை மாண்புடன் உரைப்போம்.பண்பாட்டுக்கு ஒவ்வாத கருத்துக்களை தவிர்ப்போம்.

தமிழரண் said...

ஐயா திரு. மனோகரன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் வருகையில் அக மகிழ்கிறேன்.

//தூய அகத்தின் எண்ணங்களிலியிருந்து வெளிப்படும் நல்ல வார்த்தைகள் இனிய இலக்கியமாகும்.//

தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா. ஆனால் இம்மாதிரியான படைப்புகளைப் படைப்பவர்களின் அகம் என்றோ கருத்துவிட்டது என்றே நினைக்கிறேன். அதற்குச் சான்று அவர்களின் படைப்பே.

ஐயா, தாங்கள் அறிவீர்களா என்று நான் அறியவில்லை... இந்த மாதிரியான படைப்புகளை எழுதுவது நம் இளந்தமிழாசிரியர்கள் ஐயா. அதில் பெண்களும் அடங்குவர் ஐயா. ஏதோ அவர்களுக்குள் எதையாவது எழுதி கொண்டு, பேசிக்கொண்டு போனால் போய்த் தொலையட்டும் என்று எண்னிவிடலாம். ஆனால் அதை அச்சிட்டு வெளியீடுகிறார்கள், இணையத்திலும் ஏற்றுகிறார்கள். நம் தமிழ் இலக்கியத்திற்கே இது கேடு அல்லவா???

இதில் இவர்கள் நடத்தும் கவிதை, இலக்கியப் பட்டறை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டுமென்றால் எந்த மானமுள்ள தமிழனும் கலந்துகொள்வனா??

இளந்தமிழாசிரியர்கள்தான் இப்படி என்றால் இதில் மூத்தவர்கள் அதற்கு மேலே எழுதுகிறார்கள். நினைக்கவே வெக்கக்கேடாக உள்ளது.

நன்றி.

Anonymous said...

இம்மாதிரி தேவைப்படும்போது கருத்துக்களை தைரியமாக உரைத்தல் வேண்டும்
தாமதித்தால் புரையோடிவிடும் .ராஜேந்திரன் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சி.நா.மணியன்.

தமிழரண் said...

ஐயா, சி.நா மணியன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் வருகையிலும் கருத்துரைப்பிலும் மகிழ்கிறேன்.

//இம்மாதிரி தேவைப்படும்போது கருத்துக்களை தைரியமாக உரைத்தல் வேண்டும்
தாமதித்தால் புரையோடிவிடும்//

முற்றிலும் உண்மை ஐயா.. அவரின் மனத் துணிவு பாரட்டதற்குரியது.

அன்பர் ஒருவர் அனுப்பிய நமது உள்நாட்டுப் படைப்க்பை கொஞ்சம் பாருங்களேன் ஐயா..

(அர்ச்சனை சீட்டு வாங்கிக்கொண்டு
அபிஷேகம் ஆராதனை முடித்து
வெளிவரும் போது
கடவுள்
'பாகி செப்புலோ ரிங்கிட்லா பாங்'
என்றார்

நான் நடுவிரல் காட்டினேன்)


எங்கே போகிறது மலேசிய இலக்கியம்???

நன்றி.

சுப.நற்குணன்,மலேசியா. said...

தமிழரண் அவர்களுக்கு,

நல்ல செய்தியை நாசுக்காய் எழுதியிருகிறீர்கள். இன்று நமது மலேசிய இலக்கிய வயலில் ஆங்காங்கே களைகள் வளரத் தொடங்கிவிட்டன. நடுவூரில் நச்சுமரம் போல வேர்விடத் தொடங்கியிருக்கிறது. மலேசிய எழுத்தாளர் சங்கம் போன்றவர்கள் இந்த புல்லுருவிகளை உடனடியாகப் பிடுங்கி எறிய வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழுக்கு எதிராக பார்ப்பன ஏடுகளும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த படைப்பாளிகளும் எழுதிக் குவிக்கும் கண்ணறாவிகளைத் தின்றுகொழுத்துவிட்டு இங்கேயும் சிலர் வாந்தியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு, இங்கே மூத்த எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொண்டு சிலர் சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பொது ஊடகத்தில் இவர்களின் குப்பைகளை வெளியிட இடமில்லை என்பதால் இவர்களே சிற்றிதழ்.. குற்றிதழ் என்று எதையோ நடத்தி.. குப்பை எழுத்துகளை கூவிகூவி விற்கிறார்கள்.

நீலப்படம் போல அவர்களின் பச்சையான எழுத்தைப் படிக்கும் மஞ்சள் பண்பாடு வளருவது இலக்கியத்திற்கும் நல்லதல்ல.. இங்குள்ள தமிழருக்கும் நல்லதல்ல!!

தமிழரண் said...

ஐயா சுப.நற்குணரே வணக்கம். தாங்கள் தொடர்ந்து பல நல்ல கருத்துக்களைக் கருத்துமேடையில் இடுவதில் மகிழ்கிறேன்.

//பொது ஊடகத்தில் இவர்களின் குப்பைகளை வெளியிட இடமில்லை என்பதால் இவர்களே சிற்றிதழ்.. குற்றிதழ் என்று எதையோ நடத்தி.. குப்பை எழுத்துகளை கூவிகூவி விற்கிறார்கள்.//

கூவிக்கூவி விற்றாலும் நல்ல அறிவுடையோர் அந்த கண்றாவியைத் தொட்டும் பார்க்கமாட்டார்கள். இவர்களின் கொச்சை படைப்புத் தமிழில் இருப்பதால், தமிழர்கள் ஆதரவு தர வேண்டுமெனக் கேட்கிறார்கள். என்ன கேடுக்கெட்ட குணம் பாருங்களேன் ஐயா?? இந்த மஞ்சள் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் இலக்கியம் என்று பெயராம்.... தாங்கள் சொல்வதுப் போல் இந்த நச்சு மரங்களை வேரோடு பிடுங்கி எறிவோம்! இல்லையேல் நஞ்சு வைத்துக் கொள்வோம்!!!

வே. இளஞ்செழியன் said...

கடந்த சில நாட்களாக 'சன் டிவி'யில் ஓளியேறிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்க நேரிட்டது. தொடர் நாடகங்களுக்கு அந்த ஒளியலை மிக அதிக முக்கியத்துவம் கொடுப்பது தெரிந்தது. அத்தனை நாடகங்கள்.

என்ன சிக்கலென்றால், பார்த்த எந்த ஒரு நாடகத்திலும் நல்லவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. சில கண்ணீர் விடும் ஏமாளிகளைப் பார்க்க முடிந்தது. ஆனால், இந்நாடகங்களை ஆக்கிரமிப்பவர்கள் அனைவருமே தீயவர்களே. அவர் இளைஞராக இருக்கலாம்; வயதேறியராக இருக்கலாம்; அண்ணனாக, தந்தையாக, அத்தையாக, பாட்டியாக, நண்பனாக இப்படி எத்தகைய பாத்திரத்தையும் ஏற்றிருக்கலாம். அனைவருமே மற்றவருக்கு எதிராக தீங்கு நினைப்பவராகவும், சதி தீட்டுபவராகவுமே சித்தரிக்கப்படுகின்றார்.

இந்நாடகங்களைப் பார்த்த எனக்கு இப்போது ஒரு ஐயம் ஏற்பட்டுள்ளது: இத்தகைய கேவளமான இனமா நம் தமிழினம்? நான் ஏன் இத்தகையோரைச் சந்திப்பதில்லை? இத்தகைய மிருகத்தனமான போக்கிரிக் குடும்பங்கள் தமிழுலகில் இல்லையெனில் ஏன் ஒளியேற்றப்படும் அத்தனை நாடங்கங்களும் அத்தகைய குடும்பங்களை ஒட்டியே எடுக்கப்படுகின்றன? சரி, இந்நாடகங்களை நாள்தோறும், இடைவிடாது பாப்போர் யார்? அவர்கள் குடும்பங்கள் சிறக்குமா? அல்லது அவர்களும் நல்ல எண்ணங்களைப் புறந்தள்ளி விட்டி குடி கெடுக்கும் நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனரா? நம்மினத்தில் அதிகரித்திருக்கும் மணவிலக்கிற்கு இத்தகைய நாடகங்களும் காரணிகளாக இருக்கலாமா?

சரி, இந்நாடகங்களுக்கும் திரு. இராஜேந்தினரைச் சிலாகித்து எழுதியிருக்கும் உங்கள் கட்டுரைக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் எண்ணலாம். தொடர்பு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நம் மண்ணில் தோன்றியிருக்கும் பின்நவீனத்துவ எழுத்துகளை நீலப்படங்களுடன் ஒப்பிட்டுள்ள திரு. இராஜேந்திரன், ஒரு முறையாவது அஸ்ட்ரோவில் அரங்கேற்றப்படும் தொடர் இழிவுகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருக்கின்றாரா? எழுத்தாளராகையால், அவற்றிக்கு எதிராக கதை ஏதும் எழுதி வெளியிட்டிருக்கின்றாரா? எங்கு, எப்போது?

பல கேவலங்கள் நம் சமூகத்திலிருப்பதை நாமறிவோம். பலர் அவற்றைக் கண்டும் காணாதவராய் வாழ்கிறோம். நமக்கேன்? சாக்கடையில் ஏன் இறங்குவானேன். நாம் நன்றாக இருந்தாலே போதுமானது. இது யதார்த்தம். ஒரு குறிப்பிட்ட சிலரோ, அச்சாக்கடையிலும் வாழ்வு இருக்கின்றது; மாந்தர்கள் வாழ்கின்றனர்; உயர்வும் தாழ்வும், இழிவும் மேன்மையும் அந்தச் சாக்கடையிலும் இருக்கலாம்; பார்ப்போர் எண்ணத்தையும், கோணத்தையும், கட்டமைப்பையும் பொருத்தே ஒன்று சாக்கடையா இல்லையா என்று உறுதிசெய்யப்படுகின்றது என்று வாதிடுகின்றனர்.

அதில் நமக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். அதற்கெதிராக கருத்துகள் வெளியிடலாம்; அணி திரட்டி செயல்படலாம்; மாற்றுக் கட்டமைப்பையோ பரிமாணத்தையோ முன் வைக்கலாம். இச்செயல்கள் அனைத்துமே வரவேற்கப்பட வேண்டியவையே; மதிக்கப்படுபவையே.

ஆனால், பின்நவீனத்துவ எழுத்தைப் படிக்கும்போது நீலப்படத்தைப் பார்க்கும் உணர்வு ஏற்படுவதாக கூறும் திரு. இராஜேந்திரன், விஷயம் தெரிந்து கூறுகிறாரா, அல்லது, மைக்கை முகத்தின் முன் நீட்டிவிட்டனர், எதையாவது கூறவேண்டுமே தெரியாத, புரியாத விஷயத்தைப் பற்றி உலறினாரா என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை சின்னத்திரை தொடர் நாடகங்களில் இல்லாத கேவலம் ஒன்றும் பின்நவீனத்துவ எழுத்தாளர்களின் எழுத்தில் இல்லை. அவர்களால் ஏற்படும் பாதிப்பும், கெடுதலும் (அப்படி இருந்தால்) குறைவே.

கிடைத்த வாய்ப்பை திரு. இராஜேந்திரன் நன்முறையில் பயன்படுத்தியிருக்கலாம். தவறிவிட்டார்.

தமிழரண் said...

ஐயா திரு இளஞ்செழியன் அவர்களுக்கு வணக்கம். வருகைக்கும் கருத்துரைப்பிற்கும் மகிழ்ச்சி;நன்றி.

ஐயா சொல்வதுபோல் சின்னத்திரையை முற்றிலுமாக மறுப்பவன் நானும்தான். அதில் மாற்று கருத்து இல்லை.

திரு இராஜேந்திரன் சின்னத்திரைப் பற்றி கருத்துரைப்பதில்லை என்பதால் அவர் கூறிய மலேசிய எழுத்தாளர்களின் நாச வேலைகள் சரியானதாகிவிடாதே!திரு இராஜேந்திரன் மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். ஆகவே அவர் மலேசிய எழுத்தாளர்கள் பற்றி கருத்துரைப்பதே ஏற்கத்தது. அவர் கூறியதும் முற்றிலும் உண்மை. இயன்றால் இது மலேசிய இலக்கியம் என்று உங்கள் குடும்பத்தின் முன் வாசித்துப் பாருங்கள். பின்பு உங்களுங்கே புரியும் அது சாக்கடை என்றே.

சன் தொலைகாட்சியில் ஒளியேறும் தொடர்களைப் பற்றி, அத்தகைய தொடரை மலேசியாவிலும் ஒளியேற அனுமதி வழங்கிய அதிகாரிகளை நோக்கி நீங்கள் கேள்வி எழுப்புவதே சாலும்.

வாருங்கள் ஐயா, அத்தகைய தொடர்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளை நாமே காண்போமே!!

நன்றி.