Thursday 18 February 2010

தமிழர் மானங்கெட்டவர்களா? திருமணம் - பாகம் 1

முன்னுரை

மக்கள் ஆறறிவுடையார். அதனால் எதைச் செய்யினும் அறிவோடு செய்தற்குரியர். ஒருவர் வாழ்க்கையில் தலைச்சிறந்த நிகழ்ச்சியாயும், இருவர் இன்ப வாழ்விற்கு அடிகோலுவதாயும், பலர் மகிழ்ச்சியுதற்குரிய காட்சியாயும், நூற்றுக்கணக்கான மக்கள் வந்து கூடுவதாயும், உள்ள திருமணச்சடங்கைப் புரோகிதனுக்கன்றி பொருளொடு ஓதுகின்றானா பொருளில்லாது உளறுகின்றான என்பதையும் அறியவியலாத நிலையில், இவ்விருபத்தொன்றாம் நூற்றாண்டிலும், குருட்டுத்தனமாக நடத்திருவருவது, நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் முற்றும் முரணானதாம். ஆகவே திருமணத்தைப் பற்றி சிறிதாவது தெரிந்துகொள்வதும் தெரியவிரும்புவதும் அறிவுடடையோரின் செயலாகும்.

திருமணம்
ஓர் ஆடவனும் ஒரு பெண்டும், கணவனும் மனைவியுமாக இல்லறம் நடத்த இசைந்து ஒன்று சேர்வதே மணமாம். மணத்தல் கலத்தல் அல்லது கூடுதல். மணவாழ்க்கைக்கென்றே இறைவன் மக்களை ஆணும் பெண்ணுமாய்ப் படைத்திருப்பதாலும், அதனிடத்து மிகுந்த அறப்பொறுப்புள்ளமையாலும், அது ஆயிரங்காலத்துப் பயிர் ஆகையாலும், வாழ்க்கைத் துணைவர் இருவரும் தெய்வத்தின்முன் அல்லது தெய்வத்தின்பேரில் பலரறிய ஆணையிட்டுக் கூடுவதாலும், மணம் தெய்வத்தன்மை பெற்றுத் திருமணம் எனப் பெற்றது. இப் பெயர் பின்னர், திருமணத் தொடர்பான விழாவையுங் குறித்தது.
திருமணத்திற்குரிய ஒப்பந்த அல்லது தாலிகட்டுச் சடங்கு கரணம் எனப்படும். கரணம் செய்கை, அது ஆட்சி பற்றிச் சடங்கை உணர்த்திற்று. கரணத்தோடு கூடிய திருமணத்தை வதுவை என்பது இலக்கிய வழக்கு.
முதற்காலத்தில், எல்ல ஆடவரும் பெண்டிரும், பருவம் வந்தபின் விலங்கும் பறவையும்போலக் கரணமின்றியே கூடி வாழ்ந்து வந்தனர். ஆயின், சில ஆடவர், தாம் மணந்த மகளிரை மணக்கவில்லையென்று பொய்யுரைத்தும், அவரைக் கைவிட்டும், அவர் வாழ்வைக் கெடுத்து வந்ததினால், மக்கள் மீது அருள்கொண்ட தமிழ முனிவர், கரணம் என்னும் திருமணச் சடங்கை ஏற்படுத்தினர். மணமகன், மணமகளைத் தன் நிலையான வாழ்க்கைத் துணையாகக் கொள்வதாக, பலரறியக் கடவுள் திருமுன் சூள் (ஆணை) இடுவதே கரணமாம்.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப
பொருள் : குமுதாயத்தில் பொய் கூறலும், பிழைபட நடத்தலும் தோன்றிய பின்னர், தலைவர் ஏற்படுத்தினர் வதுவை (திருமணம்) என்று கூறுவர்.
என்பது தொல்காப்பியம் (கற்பியல்,4)
-----------------------------------------------------------------------------------------------------------------
ஆரியப் பார்ப்பனர் வருகை
காட்டுமிராண்டிகளாக வந்து கயவர்களாகவும் மாறிய பார்ப்பனர் இந்நாட்டில் (தமிழ்நாட்டில்) தாம் முன்னரே அறிவு முதிர்ச்சியும், நாகரிகச் சிறப்பும் பெற்று வாழ்ந்த தமிழர்களைத் தம் அடிமைகளாக்கி ஏய்த்து வாழக்கடவுள், மதம். போன்ற கருவிகளைப் பயன்படுத்தினர். அவற்றுள் ஒன்றுதான் இத்திருமண முறையில் அவர்கள் புகுத்திய மாற்றங்கள்.
பிராமணர் தென்னாடு புகத்தொடங்கியது ஏறத்தாழக் கி.மு2000 எனும், அவர் முதலடியிலேயே பெருந் தொகையினராய் இங்கு வந்தவரல்லர். முதன்முதல் இங்குக் கால் வைத்த பிராமணர் விரல்விட்டு எண்ணத்தக்கவரே யாவர். கிறித்துவ ஊழி தொடங்கும்வரை இடையிட்டிடையிட்டுச் சிறு சிறு கூட்டத்தாராகவே அவர் வந்து கொண்டிருந்தனர். கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்குப் பின், பல்லவ அரசர் காலத்தில்தான், அவர் பெருவாரியாக வடநாட்டிலிருந்து குடியேற்றப் பட்டனர். இதைப்பிற்காலச் சேரசோழ பாண்டியரும் பின்பற்றினர்.
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடஎன்று சிலப்பதிகாரம் பிராமண அல்லது ஆரியப் பார்ப்பனப் புரோகிதத்தைக் குறித்திருப்பது, கடைச்சங்கக்காலத்தில் நகரங்களிலும் மாநகரங்களிலும் பெரும்பாலும் அரசரிடையும் வணிகரிடையும் இருந்த நிலைமையைத்தான் குறிக்கும். இன்றும் பிராமணரில்லாத பல நாட்டுப்புறத்தூர்கள் இருப்பதாலும், சில தமிழக்குலத்தார் பிராமணப் புரோகிதமின்றித் தம் மணங்களை நடத்திக்கொள்வதாலும், பிராமணர் வந்தப்பின்பும், கடைச்சங்கக் காலம்வரை பெரும்பால் தமிழர் மணங்கள் தமிழ்மரபிலேயே நடத்துவந்தன என்று அறிதல் வேண்டும்.
இடைக்கால மாறுதல்கள்
பிராமணர் பெருந்தொகையினராய்த் தமிழகம் வந்து சேர்ந்த பின், தமிழர் திருமணங்களிற் பல மாறுதல்கள் ஏற்பட்டன.
1. பிராமணப் புரோகிதமும் வடமொழிக் கரணமும்
பிராமணர் தேவர்வழி வந்த நிலத்தேவர் (பூசுரர்) என்றும்; அவர் முன்னோர் மொழியாகிய வேதமொழியும் அதனொடு வேதகால இந்திய வட்டார மொழிகளாகிய பிராகிருதங் கலந்த இலக்கிய மொழியாகிய சம்ற்கிருதமும், தேவமொழியென்றும்; இரு பெருந்தவறான கருத்துக்கள் கடைச்சங்கக் காலத்திலேயே அரசர் உள்ளத்தில் ஆழ வேரூன்றிவிட்டதனால், பிற்கலத்தில் பிராமணப்புரோகிதம் தமிழகத்தில் விரைந்து பரவுவதற்கு மிகுந்த வசதியாயிருந்தது.

ஆரியக்கரணத்தால் விளைந்த தீமைகள்
1. வடமொழி வழிபாட்டு மொழியும் சடங்கு மொழியுமாய் வழக்கூன்றியபின், தமிழ் அவற்றிற்குத் தகாததென்று தள்ளப்பட்டுத் தன் பழந் தலைமையை இழந்ததுடன், தாழ்வும் அடைந்தது.
2. தமிழப்பார்ப்பாருக்குப் பிழைப்பின்மை.
பிராமணப் புரோகிதர், உயர்தோரின் அல்லது உயர்த்தப்பட்டோரின், எல்லா மதவியற் சடங்குகளையும் ஆற்றும் தகுதியை முற்றூட்டாகப் பெற்றுவிட்டதினால், தமிழப்பார்பார் பலர்க்குப் பிழைபில்லாது போயிற்று.
3. வீண் சடங்குகள்
தீ வலஞ்செய்தல், அம்மிமிதித்தல், அருந்ததி காட்டல் முதலிய பல சடங்குகள் வீணானவையாகும். அம்மிமிதித்தல், அகலிகை சாவக்கதையை நினைப்பித்து மணமகளை எச்சரிக்கும் சடங்காகச் சொல்லப்படுகின்றது. அம்மியைத் திருமகள் தங்கும் பொருள்களுள் ஒன்றாகக் கொள்வதினால், அதை மிதிக்கும் வழக்கம் இயல்பாகத் தமிழர்க்கில்லை.
அருந்ததி காட்டல்
அருந்ததி காட்டல் என்பதும் ஆரியத் தொடர்பு கருதியதே. தமிழ மரபுப்படி அருந்ததி தலையாக கற்பரசியல்லள். அவள் தன் கணவனாகிய வசிட்டமுனிவன் ஒழுக்கத்தைப்பற்றி ஐயுற்று, அவனால் விண்மீனாகச் (நட்சந்திரம்) சாவிக்கப்பட்டாள் என்று கதை கூறுகின்றது. தமிழப் பத்தினிப் பெண்டிரோ, ‘கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை' என்னுங் கொள்கையினர். ஆதலால், ஆதிமந்திரியர், பூதப்பாண்டியன் தேவியார், கண்ணகியார், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தேவியார், திலகவதியார் முதலிய எத்துணையோ தலையாய தமிழகக் கற்புத் தெய்வங்களிருக்கவும், அவரை விட்டுவிட்டு அருந்ததியை நினைப்பித்தல், கனியிருப்பக் காய் கவர்ந்தற்றே. தொடரும்.- பாகம் 2

7 comments:

subra said...

காலத்திற்கு eddra varaivu todarungaal nanbaa
si naa.manian

Unknown said...

அம்மி தமிழரின் செல்வங்களுள் ஒன்று; மிதித்தல் தமிழர் பண்பு இல்லை என்றது உண்மை. பாராட்டுக்கள்.தொடர்க!இன்னும் எதிர்பார்க்கின்றேன்.

தமிழரண் said...

வணக்கம் ஐயா திரு சுப்பிரா, ஊமாசுதன்.

தங்களின் கருத்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி. தொடர்ந்து முயற்சி செய்கிறேன். நன்றி.

ரீங்காரன் said...

அப்படியென்றால் தமிழ் கிருஸ்துவர்கள் ஆங்கிலத்தில் பைபிளையும் தமிழ் முஸ்லீம்கள் அராபிய மொழியில் குரானையும் படித்துவிட்டு திருமணம் மற்றும் இன்னபிற சடங்குகளைச் செய்கிறார்களே..

அவர்களைப்பற்றியும் பேசினால்தானே விவாதம் பொதுவானதாக இருக்கும். இங்கு குறிப்பிட்ட சிலரை மட்டும் வசைபாடுவதாகவே தெரிகிறது. நடுநிலைமை இல்லையே..! :(

Vignes Krishnan விக்கினேசு கிருட்டிணன் said...

தன்மரியாதை உள்ளவர்கள் புரோகிதம் சொல்லி திருமணம் செய்யக் கூடாது என்று பெரியாரே சொல்லி இருக்கிறார். இருந்தும் அச்சம் எனும் மடமையால் எதிர்ப்புகள் அதிகமே. தங்களின் விளக்கம் எல்லாருக்கும் போய் சேர வேண்டும்.

தமிழரண் said...

வணக்கம் ஐயா. இரீங்காரன் அவர்களே. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

//அப்படியென்றால் தமிழ் கிருஸ்துவர்கள் ஆங்கிலத்தில் பைபிளையும் தமிழ் முஸ்லீம்கள் அராபிய மொழியில் குரானையும் படித்துவிட்டு திருமணம் மற்றும் இன்னபிற சடங்குகளைச் செய்கிறார்களே.. //

திருமணம் என்பது முதலின் பண்பாட்டுச் சடங்காகத் தோன்றி பின்னர் மதச்சடங்காக மாறியது என்பதை முதற்கண் இரீங்காரன் அறிதல் வேண்டும். எம்மதத்தையும் சாராமல் சீர்த்திருத்தத் திருமணம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் அதில் தமிழ் பண்பாட்டுச் சடங்குகள் குறைந்திருப்பது குறையே.

தமிழக் கிருத்தவர்களும் இசுலாமிலாயரும் தமிழ் பண்பாட்டு முறைபடியே திருமணம் செய்ய வேண்டும் என்பது என் கருத்து. ஆனால் அதற்கு அவர்கள் மதம் இடம்கொடுக்குமாக என்பது எனக்குத் தெரியாது.

//அவர்களைப்பற்றியும் பேசினால்தானே விவாதம் பொதுவானதாக இருக்கும். இங்கு குறிப்பிட்ட சிலரை மட்டும் வசைபாடுவதாகவே தெரிகிறது.// நடுநிலைமை இல்லையே..!

உண்மையைக் கூறினால் அதற்குப் பெயர் வசைபாட்டா ஐயா? உங்கள் மீது இருக்கும் குறையைக் கூறினால், அதைப்பற்றி பேசாமல் பிறர் மேல் இருக்கும் குற்றத்தை நான் ஏன் பேசவில்லை என்பது போன்றுதான் உங்கள் கருத்து. இங்கு நான் குறிப்பிட்ட எந்தச் சிலரைப் பற்றியும் கருத்துரைக்கவில்லை, மாறாக மானங்கெட்ட பல தமிழர்களின் அறியாமையைப் பற்றியும், கேடுசெய்த கேடுகெட்ட ஆரிய பார்பனர்களின் கீழறுப்பு வேலைகளைப் பற்றிதான் எழுதியிருக்கிறேன்.

நடுநிலைமை இருந்தால் சொன்ன கருத்தில் இருக்கும் நடுநிலைமை பற்றி பேசுங்கள் ஐயா.

நன்றி.

தமிழரண் said...

வணக்கம் திரு ஐயா விக்கினேசு.

//தன்மரியாதை உள்ளவர்கள் புரோகிதம் சொல்லி திருமணம் செய்யக் கூடாது என்று பெரியாரே சொல்லி இருக்கிறார்//

யார் சொன்னாலும்தான் நம் தமிழர்களுக்குத் தன்மரியாதை என்பது சிறிதும் வருவதே கிடையாதே!!! தாங்கள் சொல்வதுபோன்று அதற்கு அச்சம்தான் காரணம். அதற்குக் காரணம் அறியாமைதான். அறியாமை நீக்கும் கல்வி கிடைக்குமாயின் தமிழன் மீண்டும் உயிர்த்தெழுவான்.