Wednesday 5 August 2009

பாகம் 1- நவீன மொழிக்கு நவீன இலக்கியமே பகை! (அந்நியன்)

நவீன மொழிக்கு விளக்கம் கேட்டபோது சில நவீன எழுத்தாளர்கள் ‘நிதர்சனமாக’ விளக்கம் அளித்தனர். அவர்கள் ‘நிதர்சனமாக’ அளித்த விளக்கமே அவர்களின் படைப்போடு முரண்படுவதைச் (அன்னியனைப் ‘அந்நியன்’ போல’ சான்றோடு காட்டப்படும்.


பாகம் 2 புத்திலக்கியவாணர்கள் எழுப்பிற்கும் வினாக்களுக்குக் கற்றறிந்து தெளிந்த தமிழ்ச்சான்றோர்களின் எடுத்து இயம்பிய மொழியியல், வரலாற்று சான்றுகளுடன் விடையளிக்கப்படும்.



முதலில் ‘நவீன’ என்ற சொல்லே தமிழில் இல்லை என்பதை உணர்ந்து அறிவுடையோர் (நல்லபுத்தியோர்) அதனை விடுக. ஆதலில், நவீன தமிழ் என்று சொல்லி சொற்றூக்குக் கூப்பாடு போடும் வேலையை நிறுதுக. அவ்வகையில் இக் கட்டுரையில் ‘நவீன மொழி’ என்பதற்கு ‘புதிய மொழி’ என்று புத்திலக்கியவாணர்கள் பார்வையிலே ஆளப்படும், பின்பு புதிய மொழி என்னவென்பது தெளிவுப்படுத்தப்படும்.



புதியசொல்லாக்கம் புதிய வடிவில் எழுதுவது எளிய நடையில் எழுதுவது வழக்குத் தமிழில் எழுதுவது(பேச்சு மொழியில்லை) இந்நான்குமே நவீன மொழி என்கிறார்கள். இதைச்சுருக்கமாகவே சொல்லிருக்கலாம். இந்நான்கைதான் ‘நவீன மொழி’ என்று நின்றுவிடாமல் சில நகைச்சுவையான கேள்விகளையும் கருத்துகளையும் கேட்டும் சொல்லியும் உள்ளனர். இப்பொழுது அவர்கள் கூறிய கருத்துக்களே அவர்களுக்கே முரண்படுவதைக் காணுங்கள்.




1. //தமிழில் இரண்டே மொழித்தான் உண்டு, பேச்சு மொழி செந்தமிழ்// என்பது தவறான கூற்று. அப்படியென்றால் சமக்காலத்து பேச்சு மொழி எல்லாம் தமிழைச் சிதைத்துதான் பேசுகிறார்கள். மேலேயுள்ள கூற்றுபடி பார்த்தால், தமிழில் இரண்டு வகைத்தான் உண்டு ஒன்று செந்தமிழ் மற்றொன்று சிதைந்த மொழி (பேச்சு மொழி). இப்படிச் சொல்வதால் பேச்சு மொழியையும் (சிதைந்த மொழியையும்) அங்கீகரித்து தமிழில் ஒருவகையென சேர்ப்பது போலல்லவா உள்ளது சிலரின் வாதம்/கூற்று.// - புத்திலக்கியவாணன் சொன்னது-



//பேச்சு மொழியும் எழுத்து மொழியும் முற்காலம் தொட்டு இக்காலம் வரை ஒரே மாதிரியாகவா இருந்து வருகிறது? கண்டிப்பாக இல்லை. பேச்சு மொழி மற்றும் எழுத்து மொழி என்றறியப்படும் செந்தமிழ் ஆகிய இரண்டையும் சொல்லும் போது நாம் ஒன்றைக் கவனித்தல் வேண்டும்.// - இன்னொரு புத்திலக்கியவாணன் சொன்னது.



குறிப்பு (தவறான கூற்று என்று கூறியபின் அதற்கு இன்னொரு புத்திலக்கியவாணன் விளக்கம் அளித்திருப்பது எப்படி? அதுவும் ஒரே கட்டுரையில்? யார் இதிலே புல்லறிவன்? சிந்தியுங்கள்.



2. //தற்பொழுது எழுதுபவர்கள், தூயத்தமிழில் அல்லது மனிதர்கள் உரையாடும் காட்சிகளில் வழக்குத் தமிழில் அல்லது புதிய சொற்பிரயோகங்களுடனும் அதன் கட்டமைப்புகளுடனும் எழுதப்படும் தமிழில் என்று வகைப்படும் மொழியைப் பயன்படுத்துகிறார்கள்//



“ஆபாச வீடியோவும் மர்ம கடையும்” இது தூயத்தமிழா? புதிய சொல்லாக்கம் எங்கே??


‘’சொற்பிரயோகங்களுடனும்’’ இது தூயத்தமிழா?


‘’நிதர்சனம்’ இது தூயத்தமிழா? வழக்குத்தமிழா? புதிய சொல்ல பயன்பாடா?


‘யதார்த்தம்’ இது தூயத்தமிழா?







3. //ஆகையால் பேச்சு மொழியை வெறும் சிதைந்த மொழி என்றால் ஏன் சோதனைகளிலும் பாடங்களிலும் அதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பாவிக்கப் பரிந்துரைக்கப்படுகின்றன? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இது தமிழில் நிகழ்ந்த மாற்றமென்றால் வட்டார வழக்கின் பயன்பாட்டையும் அங்கீகரிக்க முயல்வதற்கான ஒரு முயற்சிகள்தான் இது.//



//இப்படிச் சொல்வதால் பேச்சு மொழியையும் (சிதைந்த மொழியையும்) அங்கீகரித்து தமிழில் ஒருவகையென சேர்ப்பது போலல்லவா உள்ளது சிலரின் வாதம்/கூற்று.//



(குறிப்பு இரண்டையும் சொன்னவர் ஒருவரே) நகைச்சுவையான புத்திலக்கியவாணன் போல.




4. //பாலியல் சொல்லாடல்களை அல்லது பாலியல் உறுப்புகளை எழுதிவிட்டால் காமம் கிளர்ந்துவிடும் பாலியல் கிளர்ச்சி ஏற்பட்டுவிடும் என்று சொல்பவர்களுக்குத்தான் மனோத்துவ அணுகுமுறைகளும் உளவியல் பயிற்சிகளும் மிக அவசியமாகத் தேவைபடுகின்றன// - புத்திலக்கியவணான் சொன்னது



//பாலியல் மற்றும் பாலியல் சொற்களூடாக நல்லதொரு படைப்பாளி சொல்ல வருவது என்னென்ன என்று யோசிக்கும் முன்னரே பெரும்பான்மையான வாசகர்கள் அதிர்ச்சியோ கிளர்ச்சியோ அடைந்து விடுகிறார்கள்.// - இன்னொரு புத்திலக்கியவணான் சொன்னது.



(குறிப்பு படைப்பாளி சொல்லவருவதற்குள் கிளர்ச்சி அடைந்துவிடுகிறார்கள் என்பதை அவரே ஒப்புக்கொண்டார். இவர்கள் படைப்பு காம கிளர்ச்சியை ஏற்படுத்துமா என்ற என் ஐயம் இப்பொழுது தீர்ந்தது. நான் சொல்லவில்லை அவரே சொல்கிறார். ஐயம் களையச் செய்தமைக்கு மிக்க நன்றி. இப்பொழுது யாருக்கு மனவியல் அணுகுமுறை தெவைப்படுகிறது? நீங்களே சிந்தியுங்கள்.



( சிரிக்க நீல படத்தை முழுதும் காட்டிவிட்டு பின்பு இம்மாதிரியான படங்களைப் பார்க்கக்கூடாது என்பார்களாம் சிலர்.)




4. //ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தமிழர்கள் பேசிய மொழியை நாம் இன்று பேசுகிறோமா? அதே போல சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நாம் எழுதிய மொழியிலா இன்றும் நாம் எழுதுகிறோம்?//



ஒரு- நூற்றாண்டுக்கு- முன்பு- தமிழர்கள்- பேசிய- மொழியை நாம்- இன்று- பேசுகிறோமா?



(குறிப்பு பல நூற்றாண்டுகாலமாக நாமெல்லாம் தமிழில் தானே பேசிவந்தோம்? மேற்கண்ட ஒரு, நூற்றாண்டு, முன்பு முதலிய சொற்கள் எந்நூற்றாண்டில் பிறந்தவன? இந்நூற்றாண்டில்தான் என்றால் அதே வினாவை 15ஆம் நூற்றாண்டில் பிறந்த தமிழன் எப்படி வினவியிருப்பான்? போதிய தெளிவு இருந்தால் இவ்வினாவையே சென்ற நூற்றாண்டிலும் இந்நூற்றாண்டிலும் எப்படி வினப்படும் என்பதை ஒன்றுமை வேற்றுமை காட்டவும் சான்றோடு.)




5. //பாமரனும் புரிந்து கொள்ளும் ஒரு நவீன மொழியில் பாலியல் பேசினால் அது பாவமா?.//



குறிப்பு : ‘யோனி’ என்ற சொல் எந்தப் பாமரனுக்குப் புரியும்?



(குறிப்பு தற்சமயத்தில் விஜயகாந் எடுந்த கணக்கெடுப்பில் நல்ல தமிழறிந்த இலக்கிய வாசகர்கள் வெறும் 5% விழுகாட்டினேரே இவற்றையெல்லாம் படிக்கிறார்களார். 0.01 விழுக்காடு கூட பாமரன் நவீன இலக்கியத்தை வாசிப்பிதில்லை. தப்பித்தான் பாமரன் என்றுதான் எண்ணவேண்டும்.



சான்று -


விஜயகாந்த் சொல்வது போல ஒரு கணக்கெடுப்பு. 100 சதவீத இளைஞர்களில், படித்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு 50 சதவீதம், அதில் தமிழ் படித்தவர்கள் ஒரு 25 சதவீதம் என்றாலும், அதில் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் ஒரு 15 சதவீதம் என்றாலும், அதிலும் தீவிர வாசிப்புடையவர்கள் ஒரு 8 சதவீதம் என்றாலும் அதிலும் நவீன இலக்கியத்தைத் தேடி வாசிப்பவர்கள் ஒரு 5 சதவீதம் என்றாலும், இந்த 5 சதவீத இளைஞர்கள் என்ன முட்டாள்களா? இவ்வளவு தூரம் தனது வாசிப்பையும் தேடலையும் அகலப்படுத்தியவர்கள் என்ன மூளை இல்லாதவர்களா? நவீன இலக்கியத்தை வாசித்துச் சீரழிந்து போவதற்கு. (அப்படியானால் இவர்கள்தான் அவர்கள் சொல்லும் அந்தப் பாமரரோ?) சிந்தியுங்கள்.




குறிப்பு : வாசகன் படித்து முடிக்கும் முன்னே காமக்கிளர்ச்சி அடைந்துவிடுகிறான் என்றால் அஃது வாசகனின் குற்றமா அல்லது படைப்பாளியின் குற்றமா??




6. கூற்று விளக்கம்: தலைவியைத் தன்னோடு கூட்டுவிக்கும்படித் தலைவன் தோழியை வேண்டினான்; அது கேட்ட தோழி தலைவியை அணுகி அவளைத் தலைவனுக்கு உடன்படுமாறு கூறியது: ;ஐவன் சிறைப்புறத்தானாக, தலைவி தான் பிரிவற்றாது வருந்தி இருத்தலையும், தன் மேனி பசலை பாய்ந்திருத்தலையும், ஊர்மக்கள் அலர் தூற்றைலையும் தலைவன் கேட்குமாறு தோழிக்குச் சொன்னது.

//நவீன மொழியில் இந்தச் சங்கப் பாடலின் கூற்று விளக்கத்தை மொழிப்பெயர்த்தால்: தலைவியோட உடம்புக்கு ஆசைப்பட்ட தலைவன் (கணவன் அல்ல) அவளை அவனோடு படுக்கும்படி தோழியைத் தூது அனுப்புகிறான். தோழியும் அவனுக்காக தூது போய் அவனுடன் ஒத்துழைக்கும்படி கேட்கிறாள். தலைவியோ இருத்தலியலின் துயரத்தையும் தூற்றப்படுதலின் வலியையும் சொல்கிறாள்.//



(குறிப்பு – எளிமைபடுத்தி எழுதிய கூற்று விளக்கத்தை புதிய மொழி என்று சொந்தமொழியிலே தவறாகவும் கொச்சையாகவும் விளக்கம் எழுதுவதுதான் புதிய மொழியா? புத்திலக்கியவாணர்கள் சொன்ன எளிய நடை / மக்கள் வழக்கு இதுதானா?)



தொடரும் தெளிவுகள்.

No comments: