Friday 7 August 2009

‘நவீனமொழி’+‘நவீன இலக்கியம்’ என்ற = பன்றிக்காய்ச்சல் (பாகம் 2)


சங்ககாலத் தமிழைப் பதம் பிரித்துப் புரிந்து கொள்பவர்கள் கூட அம்மொழியில் தானா எழுதுகிறார்கள்? ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தமிழர்கள் பேசிய மொழியை நாம் இன்று பேசுகிறோமா? அதே போல சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நாம் எழுதிய மொழியிலா இன்றும் நாம் எழுதுகிறோம்? எதில் எதுவுமே இல்லையே. சங்க காலத் தமிழைப் புரிந்து கொள்ள நம்மில் பெரும்பாலோர் பொழிப்புரையை இன்றைய தமிழில் (நவீன தமிழ் மொழி) தானே படிக்கிறோம்.


மேற்காணும் கூற்றை மறுத்து இக்கட்டுரை வரையப்படுகிறது. தற்காலத்தில், அக்காலத்தில் பேசிய தமிழை இன்று யாரும் பேசவில்லை என்றும் எழுதவில்லையென்றும் ஒரு மாயையான கருத்துச் சில புத்திலக்கியவாணர்களிடம் மட்டுமே எழுந்துள்ளது. அதோடு நின்றுவிடாமல் புதுத் தமிழ்மொழியில் பேசுகிறார்களாம்,எழுதுகிறார்களாம்.


இவர்கள் கூறும் கருத்தை வெறுமனே உணர்ச்சிவயப்பட்டு மறுத்துரைப்பதை யான் விரும்பவும் இல்லை அவ்வாறு செய்தல் அறிவுடைமையும் ஆகாது. ஆகவே மேற்சுட்டிய கருத்தை தமிழ்வரலாற்றைத் துணைக்கொண்டே மறுத்துரைக்க இயலும்; வாசகர்களும் இம்மறுப்புரையைப் புரிந்து கொள்ள இயலும். இயன்ற வரையில் சுருங்கக் கூறி எழுதுகிறேன்.


//ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தமிழர்கள் பேசிய மொழியை நாம் இன்று பேசுகிறோமா?//

யான் ஒரு நூற்றாண்டையும் முந்தி பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழர்கள் எவ்வாறு பேசினர் என்று விளக்குகிறேன். இன்று நாம் பேசுவதையும், செய்வதையும் பதிவு செய்துகொள்ளவும் ஆவணப் படுத்திக்கொள்ளவும் பல தொழில்நுட்ப கருவிகள் இருக்கின்றன. பல நூற்றாண்டு கழிந்த பிறகும் இன்று நடந்ததை அக் கருவிகள் அப்படியே ப்டம் போட்டுக் காட்டிவிடும். ஆனால் அக்காலத்தில் தமிழ்மக்கள் பேசியதை எந்தக் கருவிகள் கொண்டு அறிவது? தெளிவது? சங்க இலக்கியத்தையே ஒரு கருவியாகக் கொண்டு அறிய முனையலாம் என்பது என் துணிபு. இலக்கண நூலான தொல்காப்பியத்தைக் கருவியாகக் கொண்டு விளக்கம் அளிக்கிறேன்.


இன்று நமக்குக் கிடைக்கப்பெற்றத் தமிழ் நூல்களில் முதன்மையானது தொல்காப்பியம். இயற்றப் பெற்றக் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு. அப்படியென்றால் இற்றைக் காலத்திற்கு 2300 ஆண்டுகளுக்கு முந்தியது. 23 நூற்றாண்டு கடந்து இன்றும் இளமை குன்றாமல் ஆய்வாளனுக்கு மென்மேலும் தன்னழகைப் புதுப்பித்துக்கொண்டேயிருக்கிறது. 23 நூற்றாண்டுகளுக்கு முன் கிடைக்கப்பெற்ற நூலை வைத்துத், தமிழர் தொல்காப்பியர் போல்தான் செய்யுள் நடையில் பேசினர் என்று முடிபுக்கு யாரும் வர இயலாது. செய்யுள் வடிவம் வேறு பேச்சு வேறு. செய்யுள் வடிவம் எழுவதற்கு முன்னமே உரைநடையே (பேச்சு) தோன்றிற்று. இயற்கையும் அதுவே. எள்ளிலிருந்தே எண்ணெய் பிறக்குமே இன்றி எண்ணையிலிருந்து அன்று. சுருக்கமாகத் தமிழ்மொழியின் வளர்ச்சியை இவ்வாறு நிரல் படுத்தாலாம். பேசி பண்பட்ட தமிழ் (உரைநடை) பின்பு இலக்கியமானது பின்பு இலக்கணம் வரைந்து ஒழுகப்பெற்றது எனலாம்.


ஆக, பொதுமக்கள் உரைநடையில் பேசிய தமிழ் தன் உச்சநிலை செம்மைநிலையை அடைந்தே பிறகே இலக்கியம் தோன்றியிருத்தல் வேண்டும். செம்மையின் உச்சநிலையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழ் அடைந்துவிட்டது. அப்பொழுது அதற்குத் தமிழ் என்ற பெயரும் கிடையாது. தொல்காப்பிய காலத்திற்கும் முன்னே உச்சநிலையெய்திட்ட தமிழுக்குச் செம்மையை நோக்கிய பயணம் தொல்காப்பியர் காலத்திலும் இல்லை; இனியும் எல்லை என்பது தெளிவு. முன்னோர் சொல்வனவாகயும், பழைய நூல் கூறப்படுவனவாகும் தொல்காப்பியரே இருநூற்றைம்பதுக்கும் குறிப்புகளைத் தந்துள்ளதால் தமிழ் தனது உச்சக்கட்ட செம்மைநிலையைப் பெற்றுவிட்டது என்பதைத் துணிந்து கூறலாம். நிற்க.


தொல்காப்பிய செய்யுள் நடையில் அக்காலத்திலும், இக்காலத்திலும் பொதுமக்கள் பேசவில்லையென்றாலும், தொல்காப்பிய காலத்திற்கும் முன்னமே உரைநடையாய் திகழ்ந்த செம்மையான பேச்சு வழக்கே செய்யுளுக்கு ஏற்றாற்போல் சில திரிச்சொற்களோடு தொல்காப்பியத்தில் இடம்பெற்றிருத்தல் வேண்டும். சொல்லதிகாரத்தில் இலக்கியத்திற்கு ஏற்ற சொற்களின் வகைகளைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.


880. இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று

அனைத்தே செய்யுள் ஈட்டச்சொல்.


இயற்சொல் அன்றாடம் வழக்கத்தில் உள்ள சொல்.


திரிசொல் செய்யுளில் மட்டும் பயன்படுத்தப்படும் இயற்சொல்லின் வேறுபட்ட வடிவு.


வடசொல் அன்றைய காலத்தில் வடக்கில் வழங்கிய தமிழ்சொல் ( சமஸ்கிருதம் அன்று)


திசைச்சொல் செந்தமிழ் நிலத்தைச் சார்ந்த, தென்பாண்டி, குடம், குட்டம், அருவா, குடகர், கருநாடர் போன்ற பகுதியினர் வழங்கும் சொற்கள்.


இவ்வாறு யான் தொல்காப்பியத்தையே சுட்டி வருவதன் நோக்கம் தொல்காப்பிய காலத்திருக்கும் முன்னம் வழங்கிய தமிழும் இன்று நாம் பேசும் தமிழும் ஒன்றே என்பதை வலியுருத்தவதற்கே ஆகும். சான்றோடு தொடர்ந்து காண்போம்.


தொல்காப்பியத்தின் முதல் சூத்திரம் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் எழுதியது. அக்காலத்திற்கும் இக்காலத்திற்கும் இடைப்பட்டக் காலம் 2300 ஆண்டுகளுக்கு மேல். பல நூற்றாண்டுக்கு முன்பு எழுத்தப்பட்டது என்பதை நினைவில் கொள்க.


எழுத்து எனப் படுப

அகரம் இறுவாய்

முஃபது என்ப;

சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே.


தமிழ் எழுத்துக்கள் ‘அ’ முதல் ‘ன’ இறுதியாக முப்பது எனக் கூறுவர்; சார்பு எழுத்துக்கள் மூன்றும் அல்லாமல். தெளிவுரை எழுதியது 1998ஆம் ஆண்டு. முனைவர் ச.வே. சுப்பிரமணியன்.


அச்சூத்திரத்திற்கு நான் இப்பொழுது இவ்வாறு தெளிவுரை எழுதுகிறேன் என்போம்.-


தமிழெழுத்துக்கள் அகரத்தை முதற்கொண்டு னகரத்தை இறுதியாகக் கொண்டு சார்பு எழுத்துக்கள் மூன்றையும் தவிர்த்து முப்பது மட்டுமே ஆகும். தமிழரண் ஆகசுட்டு 2009.


//சங்க காலத் தமிழைப் புரிந்து கொள்ள நம்மில் பெரும்பாலோர் பொழிப்புரையை இன்றைய தமிழில் தானே படிக்கிறோம்.//


அவர்கூற்றுப்படிப் பார்த்தால் தொல்காப்பியர் எழுதியது பழையதமிழா (old Tamil)? முனைவர் ச.வே. சுப்பிரமணியர் எழுதியது இடைகாலத் தமிழா (middle Tamil)? தமிழரண் எழுதியது ‘நவினமொழி’ புதுத்தமிழா (modern Tamil)? ஒப்பிட்டு சிந்தித்துப் பாருங்கள் ‘அறிவுடையோரே!’


//சங்ககாலத் தமிழைப் பதம் பிரித்துப் புரிந்து கொள்பவர்கள் கூட அம்மொழியில் தானா எழுதுகிறார்கள்?//


இப்பொழுது நான் கேட்கிறேன், பதம் பிரித்துப் புரிந்து கொண்ட முனைவர் ச.வே. சுப்பிரமணியன் இப்பொழுது எம்மொழியில் எழுதியுள்ளார்?


புத்திலக்கியவாணர்கள் அல்லாமல் இவ்வாறு குருட்டுத்தனமான கருத்தை வேறு யாரும் சொல்லவே முடியாது என்பது யாம் கண்டவற்றில் முற்றிலும் உண்மை!


எழுத்து இயற்சொல் இதை நாம் பேசவில்லையா? அல்லது எழுத வில்லையா?


முஃபது செய்யுளுக்கு ஏற்ப திரிபு கொண்டிருக்கிற திரி சொல். முப்பது என்று நாம் இன்று பேசவில்லையா? அல்லது எழுதவில்லையா?


வரல் எனும் சொல்லை வருவது, வருகிறது, வந்தான், வந்தாள், வந்தன எனத் தகுந்த பின்னொட்டுகளைக் கொண்டு எந்தப் புத்திலக்கியவாணர் எழுதவில்லை? வந்துச்சு, வந்தாரு, வந்தா என்று எந்தப் புத்திலக்கியவாணர் பேசவில்லை என்று கூறமுடியுமா? மேலும் சில எடுத்துக்காட்டுகள்;-


திருக்குறள் 2036 ஆண்டிற்கு முன் எழுதியது.

அகர முதல் எழுதெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு - குறள் 1


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு - குறள்


கண்ணொடு கண்இணை நோக்கு ஒக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல. குறள் 110

பதின்னொன்றாம் திருமுறை (10 அல்லது 11 நூற்றாண்டில் எழுதியது)


“மாலைப்பொபொழுதில் மஞ்சல் அரைத்தே குளித்து

வேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப்

பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை

பித்தானால் என்செய்வாள் பின்” பட்டினத்தடிகள்


யான் மேற்சுட்டிய சில எடுத்துக்காட்டிலிருந்து நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டியது.


  1. மிக பழங்காலத்திலிருந்து இன்றுவரையிலும் தமிழ் தமிழாகவே உள்ளது.
  2. அன்றும் இன்றும் நாம் பேசி, எழுதிவந்த தமிழ் ஒன்றே என்பது.
  3. நவீனமொழி’+‘நவீன இலக்கியம்’ என்ற = பன்றிக்காய்ச்சல் தொற்று நோய் நம்மை அண்டாமல் இருந்தால், தமிழன் தமிழையே இனி என்றும் பேசியும் எழுதியும் வருவான்.


\\ஊண், உண்டி என்பன இலக்கியச் சொற்கள் (திரிச்சொல்). உணவு என்பது வழக்கு சொல் (இயற்சொல்). அடிச்சொல் உண் என்பது, மூன்றிலும் தெளிவாகத் தெரிகிறது. விகுதி முதலியன மட்டுமே வேறுபடும். ஆகவே, சிலமுறை படித்தபிறகு, பழங்காலத்துச் செய்யுளும் பழகிய தமிழாகவே உணர முடிகிறது. அதனால்தான், இக் காலத்து மக்களும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய செய்யுளையும் படித்து உணர முடிகிறது. அதனாலேயே இலக்கிய வளர்ச்சியில் இடையறாத தொடர்பு இருந்து வருகிறது|\\ - மு.வ தமிழ் இலக்கிய வரலாறு.


இல், இல, இன்மை எனும் திரிச்சொற்களை இன்றும் பேச்சில் இல்ல, என்றும் எழுதும் போது இல்லை என்றே குறிப்பிடுகிறோம். குறிக்கும் கருத்தோ ஒன்றுதான். ஆகவே, திரிச்சொற்களைக்கொண்டு மக்கள் அவ்வாறுதான் அன்று பேசியிருப்பர் என்று நாம் கருத இயலாது.

எளிய நடை


எளிய நடையைப் போய்ப் புதுத்தமிழ் என்று சொன்னால் அறிவுடையவர் யாரேனும் ஏற்பாரா? எளிய நடை என்று சொல்வதிலும் கூட என்ன வரையறைக்குள் வைத்து மதிப்பீடு செய்வதும் என்பதும் எண்ணத்தக்கது. அருஞ்சொற்களை நீக்கி எழுதுவதை ஒருவாறு எளியநடையெனலாம். அதிலும் சிக்கல் உள்ளது. மாரி, கொழுநன், இடும்பை, நோதல் போன்ற சொற்கள் எனக்குப் பழகிய சொற்களாக இருப்பினும், என் எழுத்தை வாசிப்பவனுக்கு இவை அருஞ்சொற்களாக அமையவும் கூடும். ஏனெனில் இது, எழுத்துவோரின் அறிவுநிலையும், எழுதபடுவோரின் அறிவுநிலையும் பொருத்தே அமைகிறது. எனக்குக் கடினமாகத் தோன்றிய தெளிவுரை மற்றவர்க்கு எளிமையாகக்கூடும் அவ்வாறே நேர்மறையாகவும் ஆகலாம். எல்லாருக்கும் ஒரு பொதுவான எளியநடை என்று யாரும் குறிப்பிட்டு வரம்பிட இயலாதது. இருப்பினும் எல்லாரும் அறிந்திருக்க கூடும் எனும் சொற்களை நம் பட்டறிவவைக்கொண்டு எழுதுவதை ஒருவாறு எளியநடை எனலாம். சுருங்கக் கூறின் எளிய நடையில் எழுதுவதைப் புதுத்தமிழ் ‘நவீன மொழி’ என்று கூறுதல் யாரும் ஏற்க தக்கது அல்ல.


அவர்கள் கூறும் நவீன மொழி, மொழிபெயர்ப்பை நீங்களே காணுங்கள். அதுவும் தமிழ்மொழியிலே தமிழ்மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார் கே.பாலமுருகன். புல்லறிவின் உச்சம் இது!


//நவீன மொழியில் இந்தச் சங்கப் பாடலின் கூற்று விளக்கத்தை மொழிப்பெயர்த்தால்: தலைவியோட உடம்புக்கு ஆசைப்பட்ட தலைவன்(கணவன் அல்ல) அவளை அவனொடு படுக்கும்படி தோழியைத் தூது அனுப்புகிறான். தோழியும் அவனுக்காக தூது போய் அவனுடன்ஒத்துழைக்கும்படி கேட்கிறாள்.//


பின்குறிப்பு : இக்கட்டுரையை மறுத்து, மலேசியாவில் நவீன மொழியில் யாரும் இன்னும் பேசவில்லை எழுதவில்லை என்று ஒருவன் கூறுவான் எனில், யாரும் அதிர்ச்சியோ கிளர்ச்சியோ அடைந்து விடவேண்டாம். அதிர்சியையும் கிளர்ச்சியையும் உண்டு செய்வது புத்திலக்கியவாணர்களின் நல்லபுத்தி இல்லாத வேலை!



இத்தொடு முடிக்கிறேன். அடுத்த தொடரில் பேச்சு மொழியை ஏன் எழுத்தில் பயன்படுத்தக்கூடாது என்பதைத் தமிழறிஞர்கள் கூறுகிறார்கள் என்பதைக் காண்போம்.



மேற்கோள் நூல்கள் -

தொல்காப்பியம் தெளிவுரை, முனைவர் ச.வே. சுப்பிரமணியன் – 1998

தமிழறிவோம் தொகுதி 2 – முனைவர் கு.அரசேந்திரன் - 2004

தமிழ் இலக்கிய வரலாறு – மு. வரதராசன் - 1972

தமிழ் வரலாறு 1 – மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் - 1986

4 comments:

கோவி.மதிவரன் said...

வணக்கம்.

பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் தாங்கள் வழ்ங்கிவரும் கருத்துகள் சிறப்பு.தொடர்ந்து எழுதுங்கள். அருமை பதிவு

சுப.நற்குணன்,மலேசியா. said...

தங்களின் பதிவுகள் மிகவும் அருமை. அரிய செய்திகளை அழகு தமிழில் அமுதாய் வடிக்கிறீர்கள். உங்களிடமிருந்து தமிழினம் பெற வேண்டியது நிறைய இருக்கிறது. உங்கள் எழுத்துகளால் நமது மொழியினத்தைச் செழிக்கச் செய்யுங்கள் அன்பரே.

ஆங்காங்கு சில எழுத்துப்பிழைகளைக் கண்டேன். கவனக்குறைவால் ஏற்பட்டிருக்கலாம் அல்லது தட்டச்சு செய்யும்போது ஏற்பட்டதாக இருக்கலாம்.

எழுத்து தொடர்பான தொல்காப்பிய நூற்பாவைத் திருத்திக்கொள்ளவும்.

//மிக பழங்காலத்திலிருந்து இன்றுவரையிலும் தமிழ் தமிழாகவே உள்ளது.

அன்றும் இன்றும் நாம் பேசி, எழுதிவந்த தமிழ் ஒன்றே என்பது.

‘நவீனமொழி’+‘நவீன இலக்கியம்’ என்ற = பன்றிக்காய்ச்சல் தொற்று நோய் நம்மை அண்டாமல் இருந்தால், தமிழன் தமிழையே இனி என்றும் பேசியும் எழுதியும் வருவான். //

அருமை..! அருமை..!

தாங்கள் தொடர்ந்து நல்ல செய்திகளை வழங்க வேண்டுமென விழைகிறேன்.

தமிழரண் said...

ஐயா சு.ப நற்குணன் அவர்கள் தொடர்ந்து வருவதற்கு நன்றி.

ஐயா தாங்கள் சுட்டிக்காட்டியப் பிழைகளைத் திருத்திக்கொள்கிறேன். இனி அவ்வாறு ஏற்படாதவாறு கவனித்துக்கொள்கிறேன்.

தங்களின் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

தமிழரண் said...

ஐயா மதிவரன் அவர்களுக்கு வணக்கம்.

தங்களின் பதிவுகளையும் நான் வாசித்தது உண்டு. தொடர்ந்து எழுதிவாருங்கள் ஐயா.

நன்றி