Thursday, 3 September 2009

மொழிச் சிதைவே ஓர் இனச் சிதைவு! - மறுப்புரை 4


Add Imageகடந்த தொடரில் பேச்சுமொழி எவ்வாறெல்லாம் ஆளப்படுகிறது என்பதனையும் அதன் விளைவுகளையும் ஒருவாறு காண்டோம். இத் தொடரில் தொடர்ந்து பேச்சுமொழியை (சிதைந்த பேச்சுவழக்கும் பிற மொழி கலப்பும்) படைப்பிலக்கியத்தில் வரம்பின்றி ஆளப்பட்டால் ஏற்படும் இனச் சிதைவைப் பற்றி ஆராயப்படுகிறது.


மொழிச் சிதைவே ஓர் இனத்தில் சிதைவு என்பதைத் தமிழர்களுக்கு வரலாறு கற்றுக் கொடுத்த ஒப்பற்ற பாடம். “ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் அவ்வினத்தின் மொழியை அழித்துவிடுங்கள்” என்பர். மொழி இனத்தின் அடையாளம் அல்ல, இனத்தின் உடல்! உயிர்! மூச்சு! அனைத்துமே!. ‘தமிழ் எங்கள் உயிர்’ என்ற பாவேந்தர் கூற்று வெறும் மொழியின்பால் கொண்ட அன்பினாலும், பற்றுததாலும் எழுந்தவையாக மட்டும் நான் நினையவில்லை. வரலாற்றுப் படிப்பினையை மூன்று பதத்தால் பதித்துவிட்டே சென்றியிருக்கிறார் எனத் தோன்றுகிறது.


இனி மொழிச்சிதைவுகள் காலந்தோறும் எவ்வாறு ஏற்பட்டு ஈற்றில் இனச்சிதைவுக்கு இட்டுச்சென்றது என்பதை ஆராய்யலாம். தமிழில் தொன்று தொட்டு அஃதாவது சங்க இலக்கிய காலத்திற்கு முன்பே இரண்டு வகை இருப்பதை உணரலாம். ஒன்று செந்தமிழ்; மற்றொன்று கொடுந்தமிழ். இன்று எழுத்துமொழி என்றும் பேச்சுமொழி என்றும் இதனை வேறுபடுத்திக் கூறுவர். இருப்பினும் இதை இரண்டாக வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. ஏனெனில் செந்தமிழே பிற்காலத்தில் கொடுந்தமிழாக மாறிவுள்ளது. கொடுந்தமிழிலிருந்து செந்தமிழ் அல்ல. முழுமையெய்திய ஒன்றே பின்பு முழுமையிலிருந்து விலகுகிறது. அவ்வாறு செம்மை நிலையிலிருந்து தமிழ் விலகிச்சென்றிருக்கிறது ஒழிய, விலகிய கொடுந்தமிழுக்குத் தனித்தோற்றமில்லை என்பதை உணர்க. ஆகவேதான் பேச்சுத்தமிழை வேறொறு மொழியாகப் பார்க்க இயலாதது. செம்மை என்பது இங்குச் செங்குத்தான அல்லது நேரான எனும் பொருளில் ஆளப்படுகிறது. மன்னர்க்கழகு செங்கோன் முறைமை என்பது வெற்றிவேற்கை. செங்கோன் என்பது ‘நேர்’ என்று பொருள்கொள்கிறது. செங்கோன் என்பதற்கு நேர்மறையான சொல் கொடுங்கோல். இங்குக் கொடும் என்ற சொல் வளைந்த என்ற பொருள் உடையது. செந்தமிழ் உச்சரிப்பிலிருந்து சற்று நெகிழ்ந்ததே கொடுந்தமிழ்.


செந்தமிழ் எவ்வாறு கொடுந்தமிழ் ஆனாது என்பதும் நம் சிந்தையில் எழுகிற அறிவார்ந்த வினாதான். தொல்காப்பியர் கூறும் தமிழ்கூறும் நல் உலகின் எல்லை தெற்கே குமரியாற்றிலிருந்து வடக்கே வேங்கடம் வரைக்கும் ஆகும். இன்றைய மலையாள நாட்டையும் அதன் வடக்கேயுள்ள தென் கன்னட மாவட்டத்தையும் இஃது உள்ளடக்கியதாயிருந்தது. ஆனால் இன்று இவ்வெல்லைகள் இன்னும் சுருங்கி இன்றைய தமிழ்நாட்டை மட்டும் குறிப்பதாயிற்று. இவ்வெல்லைகள் சுருக்கத்திற்கு அரசியல் என்பது காரணியாக மட்டும் கொள்ளக்கூடாது. மொழிச்சிதைவே மூலம் ஆகும்.


செந்தமிழ் நிலம் என்று அன்று குறிப்பிட்டிருந்த நிலம் வெறும் குமரிநாடாகவே இருக்க முடியும். ஏனெனில் பேச்சில் செந்தமிழாக இல்லாதிருப்பின் எவ்வாறு இலக்கியத்தில் மட்டும் செந்தமிழாக ஆளப்பெறும்? மாந்தர் பிறந்தகமாகவும், தமிழ் பிறந்தகமாவும் கொள்ளப்படும் குமரி நாடு பல நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஆழிப்பேரலைகளால் இன்று முற்றிலும் அழிந்தது. இருப்பினும் இது வெவ்வேறு காலகட்டத்தில் ஏற்பட்டமையால் தமிழர்கள் வடக்கு நோக்கி செலவு மேற்கொண்டனர். இக்காலகட்டத்தில்தான் செந்தமிழ் பேச்சில் கொடுந்தமிழாக மாறிய நிலை உருவாயிற்று. ‘முதற் சங்க சங்ககாலத்தில் செந்தமிழ் நிலமாக கருதப்பட்ட குமரியாற்றின் தென்பகுதி தொல்காப்பியர் காலத்துக்குள் தலைநகரின் மாறுபாட்டால் கொடுந் தமிழ்ப்பகுதியாகக் கருதப்பட்டது என்பது பொருந்தும்.’ கா.அப்பாதுரையார்


காலவேறுபாட்டாலும் இடவேறுபாட்டாலும் மக்கள் அவர்தம் பேச்சில் செந்தமிழைத் தொடர்ந்து பேணாதது கொடுத்தமிழாகியது. ஆக, செந்தமிழ் கொடுந்தமிழாகியது தமிழ் இனத்திற்கு ஏற்பட்ட முதல் வீழ்ச்சி. ல,ள,ழ கரத்தையும், ற,ர கரத்தையும், ந,ன, ணகரத்தையும் தம் அன்றாட வாழ்கையில் வேறுபட்ட ஒலியில் மிகவும் இயல்பாகப் பேசி வந்த குமரி நாட்டுத் தமிழனோடு, இன்று ல,ள,ழ கர ஒலி வேறுபாட்டிற்கே ஒரு மணிநேரம் பாடம் எடுக்கப்பட வேண்டிய தமிழர்களையும் ஒப்பிடுகையில், நாம் நம் நுண்றிவை, நுண்புலனறிவை எவ்வளவு இழந்துவிட்டோம்... சொல்லியும் மாளாது.


அடுத்துக் கொடுந்தமிழ் வெறும் தமிழாக மட்டும் நின்றுவிடவில்லை. தென்னகத்திலிருந்து கொண்டு சென்ற தமிழ் வடக்கே செல்ல செல்ல மெல்ல மெல்ல கொடுந்தமிழ் இன்னும் பல திரிபுகள் அடைந்தது. ஒருங்கே அமைந்த கொடுந்தமிழ் திரிபுகள் கன்னட, தெலுங்கு, மலையாளம், துளு என புதுமொழியாகத் தோன்றின. கொடுந்தமிழ் சொற்களே அம் மொழிகளுக்குப் பண்பட்ட மொழியாக இருப்பதை இன்றும் காணலாம். கொடுந்தமிழ், பல மொழிகளாகியது ஓரிரு ஆண்டுகளில் நிகழ்ந்ததன்று. பல நூற்றாண்டுகளில், பல காலங்களிலும், பல சூழல்களிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பல திரிபுகளுற்றே புது மொழியாகியுள்ளது.


சான்று கீழ்வருமாறு;


‘12ஆம் நூற்றாண்டில் மலையாள மொழி தமிழிலிருந்து பிரிந்தது. அதே சமயம் ‘தெலுங்கு-கன்னடம்’ இருமொழியாகப் பிரிவுற்றது. கன்னடம் தெலுங்கைவிடத் தமிழுடன் நெருங்கிய தொடர்புடையது. இம்மாறுபாடுகள் கி.பி 16ஆம் நூற்றாண்டுக்குள் நிறைவேறின’ கா.அப்பாதுரையார்.


விக்கிபேடியா தரும் சான்றுகள்;-


கி.பி. 1000 ஆண்டுக்கு முந்தய கல்வெட்டுகளில் தெலுகு என்ற சொல் காணமுடியாது. 11வது நூற்றாண்டில் தெலுங்கு பூமிபாலுரு (తెలుంగు భూమిపాలురు), தெல்கரமாரி ( తెల్గరమారి), தெலிங்ககுலகால (తెలింగకులకాల), தெலுங்க நாடோளகண மாதவிகெறிய (తెలుంగ నాడోళగణ మాధవికెఱియ) போன்ற குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. 11ஆம் நூற்றாண்டுக்கு பிறகே தெனுகு என்ற சொல் வழக்கில் வரத்துவங்கியது.


தெலுங்கு இலக்கியத்தை கீழ்க்கண்ட காலங்களாக பிரிப்பர்


§ நன்னய்யருக்கு முற்காலம் - கி.பி 1020 வரை

§ புராண காலம் - கி.பி 1020 முதல் கி.பி 1400 வரை

§ ஸ்ரீநாதரின் காலம் - கி.பி 1400 முதல் கி.பி 1510 வரை

§ பிரபந்த காலம் - கி.பி 1510 முதல் கி.பி 1600 வரை

§ தெற்கு காலம் - கி.பி 1600 முதல் கி.பி 1820 வரை

§ நவீன காலம் - கி.பி 1820 முதல் இன்று வரை


திரிபுற்ற நிலையில் மக்கள் பேசி வந்த கொடுந்தமிழில் இலக்கியம் படைக்க தொடங்கினர். கொடுந்தமிழ் இலக்கிய மொழியாகியது. காலந்தோறும் மக்கள் பேசுவதை அப்படியே எழுத தொடங்கிவிட்ட நிலையில் கொடுந்தமிழும் அழிந்து அதற்குப் புதுப் பெயர் தொன்றிற்று. அதுவே பின்பு கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என்றாயிற்று. இலக்கியம் தோன்றியபின் அம்மொழிகளுக்கு இலக்கணமும் வரையப்பெற்றது. ஆம் அன்றோடு தமிழர், தமிழின் தொப்புள் கொடி உறவு அறுகப்பட்டுவிட்டது. மொழிக்குப் புதுப்பெயர் தோன்றியதென்றால் புது இனமும் தொன்றிற்று என்பதுதானே பொருள்?


ஒரே மொழியும், ஒரே இனமும் பல மொழியாகவும் இனமாகவும் சிதைவடைந்து போனதற்குக் காரணம் பேச்சுமொழியைக் கொண்டு இலக்கியம் படைக்க தொடங்கியதே! இந்த வரலாற்று உண்மையைக் கூட ‘புத்தி’கெட்ட புத்திலக்கியவாணர்கள் இன்றும் அறியவில்லை! ஆகவேதான் மக்கள் பேசுவதைப் போல் ‘நவீன’ மொழியில் எழுதுகிறார்கள், எழுதவும் சொல்கிறார்கள்! என்ன மூடத்தனம் இது பார்த்தீர்களா?


தமிழ் அறிவு குன்றிய தமிழர்கள் பேச்சில் பிறமொழியைக் கலந்து பேசிவருகின்றனர். இன்னும் சிலர் நல்ல தமிழ் சொற்கள் தெரிந்தும் வேண்டுமென்றே வேற்றுமொழி மோகத்தினால் மொழி கலப்புச் செய்கின்றனர். இன்னும் சிலர் பிறமொழி கலந்தால்தான் தாங்களை அறிவுடையவரென்று மக்கள் நினைப்பரென்று ‘பிரக்ஞை’, ‘இசம்,’ ‘நிதர்சனம்’ போன்ற செத்த மொழிச் சொற்களைக் கலந்து எழுதுகின்றனர்.


வடமொழி மோகம் ஒரு காலகட்டத்தில் தமிழில் அதிகளவில் புகுந்து தமிழைச் சீர்குலைய செய்தது. இந்நிலை ஓரளவு கம்பர் வாழ்ந்த காலகட்டத்திலே தலைதூக்க தொடங்கிவிட்டது. இருப்பினும் இந்நிலை தமிழுக்கு ஆக்கம் தரவல்லதன்று அறிந்த பின் அக்காலத்திலேயே வடமொழி சொற்களைத் தமிழில் பயன்படுத்த முனைவில்லை.


இவருக்குப் பிந்திய காலத்தில் வடநாட்டார் ஆதிக்கத்தாலும், மோகத்தினாலும் தமிழில் பெரும் அளவு வடசொற்கள் வேண்டுமென்றே கலக்கப்பட்டும் திணிக்கப்பட்டும் வந்துள்ளன. இந்நிலையை தமிழைத் தவிர மற்ற திராவிட மொழிகளாகிய கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழியினர் ஏற்றுக்கொண்டுவிட்டனர். இருப்பினும், முந்திய தெலுங்கு, கன்னட, மலையாளமொழி ஆகிய மொழிகள் தமிழோடு நெருங்கிய தொடர்பு இருப்பதைக் காணலாம். எம்மொழிச் சொற்களையும் தமிழ் ஏற்கவும் இல்லை! ஏற்கவும் ஏற்காது! தமிழே எம்மொழியின் துணையும் இன்றி தானே இயங்க வல்லது என்பதனை நிறுவியது. அப்படி நிறுவிய காட்டிய தமிழ்ச்சான்றோர்கள் பலர்.


இக் கூற்றை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிறப்பால் தெலுங்கராக இருப்பினும், சற்றும் நடுநிலை தவறாது சீர்த்திருந்த தந்தையாக மட்டும் நமக்கு அறிமுகமாகிய தந்தைபெரியார் ஓரு மொழி வரலாற்று ஆசிரியராகவும் இவ்வாறு கூறுகிறார் “வடநாட்டு ஆதிக்கமும், வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய் மொழிதமிழ்'தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு.”


தொடர்ந்து வரலாற்று ஆசிரியர், மனோன்மனிய சுந்தரனார் அவர்கள்,


பல்லுயிரும் பல உலகும்

படைத் தளித்துத் துடைக்கினும் ஓர்

எல்லையரு பரம்பொருள் முன்

இருந்தபடி இருப்பதுபோல்,

கன்னடமும் களி தெலுங்கும்

கவின் மலையாளமும் துளுவும்

உன்னு தரத் துதித் தெழுந்தே

ஒன்று பல ஆயிடினும்,

ஆரியம் போல உலக வழக்கு

அழிந் தொழிந்து சிதையா உன்

சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த் துதுமே!


என்று தமிழை வாழ்த்துவதிலும் வரலாற்று உண்மையை மெய்பிக்கிறது.


பிற மொழிச்சொற்களைக் கலந்தும் பேச்சுமொழியைத் தொடர்ந்து எழுதிவந்தால் பின் நாளில் இதுவே ஒரு தனிமொழியாக உருவெடுக்கும். பின்பு தனி இனமாகவும் உருவெடுக்கும். இன்று ‘தமிங்கிலம்’ என்று வேடிக்கையாகச் சொல்வது நாளை ஓர் இனமாக, மொழியாக தோன்றியது என்றால் திகைப்படைய வேண்டுவதில்லை. ஏனெனில் அதற்குப் புத்திலக்கியக்கியவாணர்கள் இப்பொழுதே இலக்கே இல்லாமல் தாம் எழுதும் இலக்கியத்தில் இவ் வித்துகளை விதைத்துவருகின்றனர்.


‘ஐந்து தமிழக மளாவிய முத்தமிழ் அல்லது பழம் பெருந்தமிழ் இன்று இவ்வாறு சிதறுற்றுத் தேய்ந்து, ஒரு தமிழக எல்லையிலும் குறைவுற்று, ஒடுங்கிய ஒரு தமிழ் ஆகியுள்ளது’ கா.அப்பாதுரையார்.


இத் தமிழினம் தொன்று தொட்டு முதலே தமிழைச் சரியாகப் பேணி காத்துவந்திருந்தாலே பெருந்தமிழ்நில பரப்புகள் இன்று குறுகியிருக்காது. கன்னடரும், தெலுங்கரும், மலையாளியும் போன்றோரும் தமிழாரகவே இருந்திருப்பர். தமிழ் ஈழத்திற்கு எல்லாரும் ஒன்று திரண்டு ஒரே அணியில் ஒருமித்த குரலைக் கொடுத்திருப்பர். அக் குரல் நிச்சயமாக இன்று தமிழ்நாட்டில் ஒலித்த எதிர்ப்புக் குரலைவிட பன்பமடங்கு வீறு கொண்டு இருந்திருக்கும். இந்திய நடுவண் அரசே ஆட்டம் கண்டிருக்கும். தமிழீழ நம் தமிழர்கள் கொல்லபடுவதிலிருந்து காத்திருக்கலாம்.


எங்கோ யாரோ ஒரு தமிழர், செம்மொழி உச்சரிப்பிலிருந்து சற்று நெகிழ்ந்து பேச தொடங்கியது, இன்று பல தமிழீழ மக்கள் படுகொலை செய்யப்படுவதுக்கும், தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் குடிநீர் சிக்கலுக்கும் தொடர்பு இருப்பதாகவே தொன்றுகிறது. இங்குக் “காயசு” கோட்பாடு நினைவுக்கு வருகிறது.


//அப்படித் தூயத்தமிழ் சமூகத்தைத்தான் காட்ட வேண்டும் தூயத்தமிழ் உரையாடலைத்தான் இணைக்க வேண்டும் என்று இருந்திருந்தால் அது இன்றைய வாழ்வோடு தொடர்பில்லாத துண்டிக்கப்பட்ட கனவு பிரதேசத்தின் கற்பனைத்தனமாக ஆகிவிடும்//


மேற்கண்ட கூற்றைக் கூறியவரும், அக் கூற்றுக்குத் துணை நிற்பவர்களுமே கற்பனை உலகத்தில் வாழ்வபவர்கள் போலும். ஏனெனில் எந்த மொழியிலுமே, பேசுவதைப் போல எழுதுதல் முடியாது; கூடாது. மலேசியாவில் வாழ்பவர்களுக்கும் இது நன்கு தெரியும். மாலாய்மொழியில் பேசுவதைப் போல எழுத முடியாது; சீன மொழியிலும் அவ்வாறே, ஆங்கிலத்திலும் அவ்வாறே. இந்த உண்மை உணராதாவர்களும்; தெரியாதவர்களும்தான் கனவில் வாழ்கின்றனர்; அறியாமையில் உலாவுகின்றனர்.


ஆகவே, இதை நன்கு உணர்ந்து, புத்திலக்கியவாணர்கள் நல்ல தமிழையே இலக்கியத்தில் பயன்படுத்துதல் வேண்டும். இதைத் தம் சொந்த இனத்திற்குச் செய்யும் தொண்டாகவே கருத வேண்டும். அதை விடுத்து, பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் ‘நவீன’ மொழியில் பேசுகிறோம், எழுதுகிறோம் என்று குருட்டுத்தனமான சிந்தனையிலே இருப்பார்களானால், இவர்கள் இவ்வினைத்தின் கீழறுப்பர்கள் என்றே கருதப்படுவர்!.


இனமான சிந்தனை உடைய எந்த ஒரு புத்திலக்கியவாணர்களும் இச் செயலைச் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு!.


மேற்கோள் நூல்கள்

1. தென்மொழி - கா.அப்பாத்துரை

2. தமிழ் இலக்கிய வரலாறு.

மேற்கோள் அகப்பக்கம்/வலைபதிவு

1. விக்கிபீடியா

2. http://periyaarr.blogspot.com/

10 comments:

Anonymous said...

நல்ல பதிவு. வரலாறு படித்த நிறைவு. உங்கள் பணி பாராட்டுக்குரியது மட்டும் அல்ல. படித்துத் தெளிய வேண்டிய ஒன்று. சான்றுகளும் ஏற்புடையதே.

இனியன்,
பினாங்கு

தமிழரண் said...

வணக்கம் இனியன் அவர்களே.

தொடர்ந்து வருவதற்கு நன்றி.நம் மொழியை நாம் பேணினால் மட்டுமே நம் இனத்தைக் காக்க இயலும் என்பது என் திடமான நம்பிக்கை.

நன்றி.

சுப.நற்குணன் said...

ஐயா தமிழரண்,

அருமையானதொரு பதிவை எழுதியுள்ளீர்கள். செந்தமிழ் எப்படி கொடுந்தமிழிழாகி பின்பு தனிமொழியாகவும் தனி இனமாகவும் ஆனது என்பதை கோர்வையாக்கிக் கொடுத்துத்துள்ளீர்கள்.

சுரணையுள்ள தமிழர்களுக்கு இந்தப் பதிவு தேனமுது. தமிழ்ச் சுரணகெட்ட தமிழர்க்கு அருமருந்து. பலருக்கும் நல்ல தெளிவை கொடுக்கும் வகையில் வரலாற்றுச் செய்திகளை நன்றாகத் தொகுத்துள்ளீர்கள். பாராட்டுகள்!

//மொழிச் சிதைவே ஓர் இனத்தில் சிதைவு என்பதைத் தமிழர்களுக்கு வரலாறு கற்றுக் கொடுத்த ஒப்பற்ற பாடம். “ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் அவ்வினத்தின் மொழியை அழித்துவிடுங்கள்” என்பர். மொழி இனத்தின் அடையாளம் அல்ல, இனத்தின் உடல்! உயிர்! மூச்சு! அனைத்துமே!. //


//பிற மொழிச்சொற்களைக் கலந்தும் பேச்சுமொழியைத் தொடர்ந்து எழுதிவந்தால் பின் நாளில் இதுவே ஒரு தனிமொழியாக உருவெடுக்கும். பின்பு தனி இனமாகவும் உருவெடுக்கும். இன்று ‘தமிங்கிலம்’ என்று வேடிக்கையாகச் சொல்வது நாளை ஓர் இனமாக, மொழியாக தோன்றியது என்றால் திகைப்படைய வேண்டுவதில்லை. ஏனெனில் அதற்குப் புத்திலக்கியக்கியவாணர்கள் இப்பொழுதே இலக்கே இல்லாமல் தாம் எழுதும் இலக்கியத்தில் இவ் வித்துகளை விதைத்துவருகின்றனர். //

மிகவும் சரியான - தெளிவுமிக்க கருத்துகள். இவை புரியாமல் - தெரியாமல்தான் படைப்பாளிகள் என்ற பெயரில் சில அரவேக்காடுகள் 'புழுத்த'தனமாக எழுதிக்கொண்டிருகின்றனர். இப்படியான புழுக்கறைகளை ஆதரிக்க சில ஏடுகளும் துணைபோகின்றன.

தமிழ்நாட்டில் பார்ப்பன வெறியர்களும் தமிழ்ப் பகைவர்களும் செய்யும் தமிழ் அழிப்பை இங்கெ தமிழர்களே செய்கிறார்கள்.. மானங்கெட்டவர்கள்.

இவனா தமிழன் இருக்காது..!!

தமிழரண் said...

வணக்கம் ஐயா சுப.நற்குணன்.

//தமிழ்நாட்டில் பார்ப்பன வெறியர்களும் தமிழ்ப் பகைவர்களும் செய்யும் தமிழ் அழிப்பை இங்கே தமிழர்களே செய்கிறார்கள்.. மானங்கெட்டவர்கள்.

இவனா தமிழன் இருக்காது..!//

உண்மை.. உண்மை.. இவர்கள் பாட்டனுக்குத் தப்பிப் பிறந்த பிறப்புகள்! மானங்கெட்டப் பிறப்பு!

நன்றி. தொடர்ந்து வருக.

கோவி.மதிவரன் said...

வணக்கம் வாழ்க

மொழியில் ஏற்பட்ட சிதைவுதான் நமது தமிழினம் வீழ்வதற்கு முகாமையான காரணியாகும். மொழியை எப்பொழுது மறந்தானோ அப்பொழுதே இனத்தையும் மறந்துவிட்டு இன்று இந்தியர் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கின்றனர். தமிழன் தமிழனாக வாழாதவரை மற்றவர்கு அடிமையே. தமிழ் ஒன்றே இவனை மீட்கும்

தமிழரண் said...

வணக்கம் திரு. கோவி. மதிவரன்

//தமிழன் தமிழனாக வாழாதவரை மற்றவர்கு அடிமையே. தமிழ் ஒன்றே இவனை மீட்கும்//

தமிழனின் அடிமை போக்கு ஒன்றா இரண்டா???

1. பார்ப்பனிய அடிமை
2. சமசுகிருத அடிமை
3. மூடநம்பிக்கை அடிமை
4. களி ஆட்டங்களுக்கு அடிமை
5. கள்ளுக்கு அடிமை
6. சின்னத்திரைகளுக்கு அடிமை
7. நடிகர்களுக்கு அடிமை
8. ஆங்கிலேயனுக்கு அடிமை
9. ஆங்கிலத்திர்க்கு அடிமை
10. போதைக்கு அடிமை
11. எண் கணிதத்திற்கு அடிமை
12. யாகங்களுக்கு அடிமை
13. பண்பாட்டு அடிமை
14. வெள்ளைத் தோலைக் கண்டால் அதற்கும் அடிமை.
15. பணத்திற்கு அடிமை
16. வெறும் புகழ்ச்சிக்கு அடிமை!

இன்னும் நீளும் இந்த தமிழனின் அடிமை போக்கு!

தமிழன் தமிழனாக என்றுதான் வாழ்வானோ????

நன்றி.

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

வணக்கம் நல்ல பதிவு.இன்றைய மொழியியலாளர்களின் கூற்று பேச்சு மொழியே எழுத்து மொழியாகும் போது அம் மொழி வாழும் என்று கருதுகின்றனர்.ஏன் என்றால் குழந்தைகள் தமிழ் மொழி கற்றுக் கொள்ளும் போது இரட்டை வழக்கு மொழியைப் புரிந்து கொள்ளவதில் தடுமாறுகிறார்கள் என்று காரணம் கூறுகின்றனர்.இதைப் பற்றி உங்கள் கருத்தினைக் கூறவும்.

தமிழரண் said...

வணக்கம் ஐயை முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களே. தங்களின் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

//மொழியியலாளர்களின் கூற்று பேச்சு மொழியே எழுத்து மொழியாகும் போது அம் மொழி வாழும் என்று கருதுகின்றனர்.//


சிறந்த மொழியிலாளர்களின் கூற்று இவ்வாறு இருக்காது என்றே அறிகிறேன். ஏனெனில் மொழியை வெறும் தொடர்பு கருவி என்ற கூற்றைத் தகர்த்து எறிபவர்கள் மொழியிலாளர்கள். எ.கா. பாவாணர் போன்றோர்.

மேற்கூறிய கூற்று பொருத்தமாகாது. ஏனெனில் இஃது உலகமொழிகளில் எல்லாவற்றிக்கும் இரு வழக்குகள் கண்டிப்பாக உண்டு. உண்மையில் பேச்சுமொழி எழுத்துமொழி என்பன வெவ்வேறு கிடையாதே. பேச்சுமொழி பேசுவோரின் தன்மைக்கும் இடத்திற்கும் ஏற்றவாறு மாறக்கூடியது. ஆனால் எழுத்துமொழி அம்மொழிபேசும் இனத்தவர்களால் கையாளப்படுகிற செம்மையான பொது வழக்கு. இஃது எல்லாருக்கும் புரிய கூடிய வழக்கு. இங்கே யார் எங்கே வாழ்ந்தாலும், எத்தன்மையுடையவராயினும் சரியான இலக்கண விதிகளுடன் எழுதுவது அவசியமானது. அவ்வாறின்றி எவ்வாறு பேச்சுமொழியால் கருத்து மாற்றாம் எல்லாருக்கும் தெளிவாகச் சென்று சேர்க்க முடியும்? பேச்சுமொழியால் கருத்தைக் தெளிவாகக் கூற இயலாத போழ்து, பிறகு அம்மொழியால் பயன் யாது?

பேச்சுமொழி எழுத்தானால், மொழி சாவுமே அன்றி உயிர்வாதல் என்றும் கிடையாது. பேச்சுமொழியால் மொழிதிரிந்துகொண்டே போகும். பின்பு இனமும் திரிந்துகொண்டே போகும்.

//தமிழ் மொழி கற்றுக் கொள்ளும் போது இரட்டை வழக்கு மொழியைப் புரிந்து கொள்ளுவதில் தடுமாறுகிறார்கள் என்று காரணம் கூறுகின்றனர்.//

இது தமிழ் மொழிக்கு மட்டுமின்றி எல்லா மொழிக்கும் பொதுவானதுதான். ஒரு வேளை ஆங்கில எழுத்து மொழியையே நாம் கற்று அதையே பெசிவருவதால் இந்த வேறுபாட்டை அறிந்திருக்க மாட்டார் எனத் தோன்றுகிறது.

தமிழ்மொழியைப் பொருத்தவரையில் இந்த இரட்டைவழக்குப் பெரிய சிக்கலே இல்லை. ஆசிரியர் எழுத்துமொழியைத்தான் கற்பிக்கராரே அன்றி பேச்சுமொழி அன்று. நான் மேலே குறிப்பிட்டதுபோல் பேச்சுமொழி என்பது செம்மைமொழியிலிருந்து சற்று நெகிழ்ததே அன்றி புது மொழி அன்று. எ.கா. சோறு, பழம், எடு, கொடு, ஓடு, சொல் என்பதெல்லாம் பேச்சிலும் எழுத்திலும் ஒன்றுதானே?

ஆசிரியர் செம்மொழியால் பேசுவாரானால் மாணவர்களுக்கு இந்தமொழி வேறுபாடு சிக்கல் முற்றிலும் இராது. மாணவர்களின் தடுமாற்றாத்தைப் போக்க வல்லவரே ஆசிரியர் ஆவார்.

மேல்நிலையில் தொடர்ந்து மாணவர்கள் கற்க கற்க இந்த சிக்கலை அவர்களே களைந்துவிடுவர்.

நன்றி.

chudar said...

வணக்கம். அரியதொரு படைப்பு. காலந்தோறும், தமிழுக்கு ஊறு விளைத்தவன் தமிழனே அன்றி, பிறரல்லர். தமிழின் வரலாறு அறியாத தமிழர் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.

தமிழரண் said...

வணக்கம் ஐயா சுதர்,

தங்களின் வரவில் மகிழ்கிறேன்.தொடர்ந்து வருக.

//காலந்தோறும், தமிழுக்கு ஊறு விளைத்தவன் தமிழனே அன்றி, பிறரல்லர் //

தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.ஊறு விளைவிக்கின்ற தமிழனை வேரோடு அறுத்தெறிவோம்.