Friday, 18 September 2009

(நவின) புத்திலக்கியம் + இலக்கு = இலக்கே இல்லை!!

தமிழ் இலக்கியம் மிக தொன்மையுடையது. உலக இலக்கியங்கள் அனைத்தும் சங்க இலக்கியத்திற்கு நிகரில்லாதது என துணிந்து கூறலாம். தமிழ் இலக்கியமாகிய திருக்குறளைப் போற்றாத உலக அறிஞர்களே இல்லை என்றும் கூறலாம். ஏன் உலகமே போற்றக்கூடிய இலக்கியமாக நம் சங்க இலக்கியம் மட்டும் இவ்வளவு சிறப்பைக் கொண்டுள்ளது? எண்ணிப்பார்த்தால் அது மிக நேர்த்தியான இலக்கை கொண்டு இயம்பியிருப்பதே ஆகும்.


இயம்பல் என்றால் இசைப்பட ஒலித்தல். எதை இசைப்பட இயம்புதல் வேண்டும்? இலக்கை இசைப்பட இயம்புதல் வேண்டும். சரி, அந்த இலக்கு என்பது எதை நோக்கியது? அவ்விலக்கு எவ்வாறு அமைய வேண்டும்?


தமிழர் வாழ்வு நான்கு உறுதிப்பொருள்களைக் கொண்டது. அவை முறையே அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும். இந்த நான்கு உறுதிப்பொருளையும் கொள்ளாத சங்க இலக்கியமே இல்லை. அறத்தை முதலாகக் கொண்டு வீடு பேற்றைப் பெறுதலே தமிழர்களின் வாழ்க்கை நெறியாகும். அவ்வாறு நம் வாழ்க்கையில் அறம், பொருள், இன்பம், வீடு இவற்றைப் வாழ்வினிருந்து பிரிக்க முடியாத ஒன்று. இவ்வுண்மையை நன்குணர்ந்த நம் புலவர்கள், அவர்கள் இயற்றும் இலக்கியத்தில் அறப் பொருளைக் கொண்டோ, பொருள் பொருளைக் கொண்டோ, இன்ப பொருளைக் கொண்டோ, வீடு பொருளைக் கொண்டோ இலக்கியம் வரைந்தனர். அல்லது நான்கு உறுதிப்பொருளையும் கொண்டு ஒரே நூலாக அமைப்பதும் புலவர்களின் உரிமையாகும். காட்டாக திருக்குறள், முப்பாலை கொண்டு இயம்பியது. அகநானூறு இன்பத்தைக் கொண்டு இயம்பியது. புறநானுறு பொருட்பாளைக் கொண்டு இயம்பியது.


எந்த ஓர் உறுதிப்பொருளைக் கொண்டு புலவர்கள் பாடல் இயற்றினாலும் அது பாட்டாகவே அமைந்தது. ஆசிரியப்பா, நூற்பா, கலிப்பா, வெண்பா என பாடுபொருளுக்கு ஏற்றற்போல் வகுத்து பாடியுள்ளனர். காட்டாக, திருக்குறளில் அமைந்த ஒவ்வொரு குறட்பாவும் ஒவ்வொரு பண்களைக் கொண்டு இயம்பியுள்ளது. சுருக்கமாக, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப்பொருள்களையும் இசைப்பட ஒலித்தலே தமிழ் இலக்கியம் ஆகும். தமிழில் இலக்கியம் என்றசொல் இதைத்தான் உணர்த்துகிறது. தொல்காப்பியம் முதற் கொண்டு மாகவி பாரதி பாட்டுகளும் இம்முறைகளில் அமைந்தவையே.


ஆனால், இன்று புத்திலக்கியம் இந்த நேர்த்தியான வடிவிலிருந்து வழி தவறி நடு தெருவில் நின்று கொண்டிருக்கிறது. ஏனெனில் புத்திலக்கியத்திற்கு வடிவம் சொல்லும் பல புத்திலக்கியவாணர்கள் இப்படிச் சொல்கின்றனர். ‘நவின இலக்கியத்தில் யாருக்கும் நீதி சொல்லக் கூடாது; அறிவுரைக் கூறக்கூடாது, நற்பண்புகளைக் கூறக்கூடாது, ஒழுக்கத்தைப் பற்றி வாயே திறக்கக் கூடாது என்கிறார்கள். பின்பு என்னத்தான் சொல்வார்கள்? வாழ்க்கை அனுபவங்களைக் சற்று உண்மைகலந்தும் கற்பனைக் கலந்தும் எழுதுவார்களாம், பின்பு வாசகர்களே கருத்தை முடிவு செய்து கொள்வார்களாம். பலபேர் நவின இலக்கியம் என்று அவர்கள் கூறும் படைப்புகளைப் படித்துவிட்டு இறுதியில் ‘இவர் என்னதான் சொல்ல வருகிறார்?’ என்றே முனுமுனுத்துள்ளனர். நவின இலக்கியம் படிப்பவர்களுக்கு இது தெரியும்.


அப்படி என்னத்தான் அனுபவங்களை எழுதியுள்ளனர் என்று பார்த்தால், அன்றாட வாழ்வில் காலையில் எழுந்து மலக்கூடத்திற்குச் சென்று மலம் கழித்து வரலை போன்ற அனுபவத்தை எழுதியுள்ளனர். யாரவது என்ன படைப்பு இஃது என்று கேட்டால், இது தான் வாழ்க்கை நடப்பியல் (நிதர்சனம்; யதார்த்தம் என்று கூறுகிறார்கள். நம்மிடம் மறு வினா எழுப்புகிறார்கள் இப்படி ‘ஏன் நீங்கள் மலம் கழிப்பதில்லையா? உங்கள் வாழ்வில் இது நிகழவில்லையா? அகவே இதைத்தான் எழுதுகிறோம் என்கிறார்கள். நான் மலத்தை மேற்சுட்டிக் காட்டியது அவ்வாறான கழிக்கப்பட வேண்டியவற்றைக் கொண்டு பல புத்திலக்கியாவாணர்கள் கதை, கவிதை என்று எழுதி தள்ளுகிறார்கள் என்பதனாலேயே! குப்பையைக் கண்டு நம் அச்சம் கொள்ள தேவையில்லை எனினும், இவ்வாறான புத்திலக்கியக் குப்பைகள் பெருகிப் போனால் பின்பு நம் தமிழ் இலக்கியமே உலக அரங்கில் நாறிப்போய்விடும்.


அறிவுரைகளையோ, நற்பண்புகளையோ நேரிடையாக அழுத்தியோ, இடித்துரைத்தோ கூறாமல் வாழ்வின் அனுபவங்களின் வழி அறநெறிகளை சொல்லாமல் சொல்வது இலக்கியத்தில் கையாளப்படுகிற ஓர் உத்தி முறையேயாகும். இந்த உத்திமுறை பல ஆயிரம் ஆண்டுகாலமாக நம் இலக்கியத்திலே இருத்தலைக் காணலாம். காட்டாக திருக்குறளில் இவ்வாறான உத்தி முறறயில் அமைந்த குறள் ஒன்றைக் காணலாம்.


பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயி றூறிய நீர் குறள் 1121.


பொழியுரை : நயமான வார்த்தைகளைப் பேசும் என் காதலியைப் (புணர்ந்தபோது) அவளுடைய தூய்மையான பற்களிடையே ஊறிவந்த நீர் பாலோடு தேன் கலந்ததுபோல் இருந்ததே!


இக்குறளில் என்ன சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர்? தலைவன் தலைவியிடம் முத்தத்தால் பெற்ற இன்பத்தைக் கூறியிருக்கிறார். இது தலைவனின் அனுபவம். குறட் பா.(பாட்டு) இந்த அனுபவத்தின் வழி நாம் பெறுவது என்ன? இக்குறளின் இலக்கு என்ன? சற்று ஆய்ந்து நோக்குவோம்.


பணி பண்பு, பண்பாடு, பணிவு, பண்பட்ட நிலம் போன்ற சொற்கள் ஒரே கருத்தில் அமைந்தமை. வாழ்க்கை நெறிகளான, அன்பு, ஒழுக்கம், அடக்கம், நாணம் ஆகிய பண்புகளை செம்மையுற பெற்றவளே பண்பானவள் ஆவாள். அவ்வாறான நெறிகளை உடையவள்தானே பணிமொழிகளைப் பேச இயலும். பண்பட்டவள் அஃதாவது விளைச்சலுக்கு ஏற்ற நிலம் போல இல்லற வாழ்வினை நடத்த தகுதியுடையவள். இவளின் தூய்மையான பற்களிடை ஊறிவந்த வாயூறலே பாலொடு தேன் கல்ந்தது போன்றதாம். விலைமகளிரும் பெண்தான், பிறன் மனையாளும் பெண்தான். இவ்விடத்தில் பொதுவாக அனைத்துப் பெண்களின் வாயூறையுளையும் சுட்டியிருந்தால் இக் குறள் வெறும் அனுபவத்தைக் கூறும் வரிகளாக மட்டும் அமைந்திருக்கும்; கருத்திருக்கும் இடமளித்திருக்காது ‘நவின இலக்கியம் போல’. ஆகவே பணிமொழி என்ற சொல்லால் பெண்ணின் பண்புக் கூறப்படுகிறது; அவ்வாறான பெண்ணிடமிருந்து பெறுவதே ஆணுக்கு இன்பம் என்றும் கூறுகிறப்படுகிறது. இக் குறளை இன்னும் விளக்கினால் நீளும். நிற்க.


தலைவன் தலைவியோடு பெற்று தழுவிய அனுபவத்தில் எத்துணை செய்திகள் புதைந்துள்ளன என்பதைக் கண்டோம். அந்தக் குறளில் வள்ளுவர் இதைச் செய், அதைச் செய்யாதே, இது கூடாது, அது கூடாது என்று கூறவேவில்லை. ஆனால் கூறாமல் எதை எல்லாம் கூற வேண்டுமோ அத்துணையையும் கூறிவிட்டார், இன்று புத்திலக்கியவாணர்கள் சொல்லும் உத்தி முறையைக் கொண்டு. இஃது அல்லவா இலக்கியம்?


ஆனால் இன்றைய புத்திலக்கியமோ இந்த ஒரே ஒரு உத்திமுறையைக் கொண்டு இற்றை இலக்கியம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையரையும் செய்துகொண்டது. பலபேர் இந்த உத்திமுறையின் நுட்பம் அறியாது வாழ்க்கையில் நடக்கும் அசிங்கத்தை எழுதிவிட்டு இதுதான் இலக்கியம் என்கின்றனர். எவ்வளவு பெரிய மூடத்தனம் இது??


இறுதியாக, புத்திலக்கியவாணர்கள் எழுதும் படைப்புகள் பாடலாக அமையாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அஃது இலக்கு உடையதா என்று ஒரு கணம் சிந்த்தித்தல் வேண்டும். வள்ளுவர் எழுதியதும் இலக்கியம், இவர்கள் எழுதுவதும் இலக்கியமா? அதற்கு வலைபதிவு, சிற்றிதழ், இணையத்தலம், அவ்வப்போது தாங்களே புத்தகம் வெளியீட்டுக்கொள்வது, அதில் இஃதெல்லாம் தீவிர இலக்கியம் என்றும் கூறுகிறார்கள். கிறுக்குப் பிடித்தவர்கள். ஆகவே படைப்பில் இலக்கு இல்லாமல், எழுதுகிறவனுக்கு மட்டும் பல ‘இலக்குகளை’ உடையது எனலாம் தீவிர நவின இலக்கியம்.

13 comments:

கவிக்கிழவன் said...

நன்றாக உள்ளது

தமிழரண் said...

> கவிக்கிழவன், வணக்கம்.

தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி. தொடர்ந்து வருங்கள்.

நன்றி.

Anonymous said...

//அறிவுரைகளையோ, நற்பண்புகளையோ நேரிடையாக அழுத்தியோ, இடித்துரைத்தோ கூறாமல் வாழ்வின் அனுபவங்களின் வழி அறநெறிகளை சொல்லாமல் சொல்வது இலக்கியத்தில் கையாளப்படுகிற ஓர் உத்தி முறையேயாகும். இந்த உத்திமுறை பல ஆயிரம் ஆண்டுகாலமாக நம் இலக்கியத்திலே இருத்தலைக் காணலாம்//- இது பாலமுருகன் போன்றவருக்கு செமத்தியான அடி.
அசத்தல் பதிவு இது.
மேலும் எழுதுங்கள்.

இனியன்,
பினாங்கு

Anonymous said...

நன்றாக எழுதி உள்ளீர்கள். உங்கள் கருத்துகள் சிந்தனையைத் தூண்டுகின்றன.

கண்ணில் பட்ட ஒரு கன்றாவியை இங்கே தருகிறேன். இதெவெல்லாம் நவின கவிதையாம்..!! குமட்டிக்கொண்டு வருகிறது..!

//ஆழ்ந்த‌ உற‌க்க‌த்தில்
க‌ன‌வு என்னை
குளிய‌ல‌றையை நோக்கி
அழைத்துச் சென்ற‌து.

ப‌ள‌ப‌ள‌க்கும் கண்ணாடியில்
அன்று குளித்த‌வ‌ர்க‌ளின்
நிர்வாண‌ம்
காட்சிக‌ளாக‌த் தோன்றி
ம‌றைந்தன‌.

ஒரு ச‌ம‌ய‌ம்
இதே க‌ண்ணாடியை
உற்றுப் பார்க்கையில்
த‌ம்பி
சுய‌ இன்ப‌ம் கொண்ட‌தையும்

ஐந்து குழ‌ந்தைக‌ளுக்குப்
பிற‌கு
கோடுக‌ள் நிர‌ம்பி
ஊதிப்பெருத்த‌
அம்மாவின் வ‌யிற்றையும்

திரும்ப‌த் திரும்ப‌ த‌ன்னை
வ‌சீக‌ர‌மாக்கும்
மீசையில் க‌ருப்பு மை பூசும்
அப்பாவையும்

பார்க்க‌ நேர்ந்துவிட்ட‌து

நான் ப‌ய‌ந்த‌து போல‌வே
எல்லா நிர்வாண‌த்தையும்//

வாசகனுக்கு சிந்திக்கக் கொஞ்சம் இடம் கொடுப்பதுதான் சிறந்த இலக்கியம் என்பார்கள். இதை எழுதியவர் எதை சிந்திக்க வைத்திருக்கிறார் பாருங்கள்..

1.தம்பி சுய இன்பம் செய்ததன் இறுதியில்...

2.அம்மாவின் வயிற்றுக்குக் கீழே..

3.அப்பா மீசைக்கு மையடிக்கும் காட்சி மட்டுமா? அடுத்து...

நவின கவிதை நல்லா வளருதுங்கோ!!

இவண்,
மானமுள்ள நவின இலக்கியன்.

தமிழரண் said...

வணக்கம் இனியன்.

//இது பாலமுருகன் போன்றவருக்கு செமத்தியான அடி.//

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்பர்... அந்தப் போன்றவருக்கு மண்டையில் ஏறுகிறதா என்று பார்ப்போம்.

நன்றி. தொடர்ந்து வருக இனியன் ஐயா.

தமிழரண் said...

ஐயா மானமுள்ள நவின இலக்கியன் அவர்க்களுக்கு வணக்கம்.

தாங்களின் கண்ணில் பட்ட கன்றாவியைப் படித்தேன். கன்றாவியைவிட மிக மோசமான சொல் இருந்தால் இந்த கவிதைக்குப் பொருந்தும்.

அந்தக் கவிதையை எழுதியர் ஒரு பெண் என்றும் அறிந்தேன். கவிதையே இவ்வளவு கன்றாவி என்றால் இதை எழுதியவரும், இதை அச்சில் ஏற்றி பரப்பியவர்களையும் என்னவென்று சொல்வது??

உண்மையில், இன்றைய எழுத்தாளர்களுக்கு தமிழ் அறிவைப் கற்பிப்பதைவிட, நன்னெறிக்கல்வி ஆண்டு 1 பாடத்தைத்தான் முதலில் கற்பிக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

நன்றி. தொடர்ந்து வருக.

சுப.நற்குணன் said...

மீண்டும் ஓர் பயனான இடுகை எழுதியிருக்கும் தமிழரண் அவர்களுக்கு முதற்கண் என் மனமார்ந்த பாராட்டுகள்.

//யாரவது என்ன படைப்பு இஃது என்று கேட்டால், இது தான் வாழ்க்கை நடப்பியல் (நிதர்சனம்; யதார்த்தம் என்று கூறுகிறார்கள். நம்மிடம் மறு வினா எழுப்புகிறார்கள் இப்படி ‘ஏன் நீங்கள் மலம் கழிப்பதில்லையா? உங்கள் வாழ்வில் இது நிகழவில்லையா? அகவே இதைத்தான் எழுதுகிறோம் என்கிறார்கள்.//

அதுமட்டுமா தமிழரண் ஐயா.

ஒருவன் மலம் கழித்துக்கொண்டே வெள்ளரிப் பிஞ்சை தின்றுகொண்டிருந்தானாம். ஐயா, இப்படி செய்யலாமா? என ஒருவர் கேட்டாராம். அதற்கு "நான் இப்படியும் தின்னுவேன்.. மலத்தில் தொட்டுக்கொண்டும் தின்னுவேன்.. அதைக் கேட்க நீங்கள் யார்?" என்று சொல்லி, சொன்னபடி தொட்டுத் தொட்டுத் தின்றானாம்.

இப்படித்தான் இருக்கிறது நமது நவின படைப்பாளிகள் கதையும்.

நாம் ஒன்றுகூடி 2 விடயங்கள் செய்வோம்.

1.இவர்களின் படைப்பை நவின இலக்கியம் எனச் சொல்லுவதை நிறுத்த வேண்டும். ஏனெனில் அவை இலக்கியம் ஆகா! (மாற்றாக, நவின படைப்பு எனச் செல்லலாம்)

2.இவர்களைப் புத்திலக்கியவாணர்கள் அல்லது நவின இலக்கியவாதிகள் / எழுத்தாளர்கள் எனக் குறிப்பதையும் நிறுத்துவோம். எனெனில், இவர்கள் படைப்பு இலக்கியமே அல்ல என்றாகிவிட்ட பிறகு இலக்கியவாணர் எனச் செல்வது சரியல்ல. அடுத்து இவர்கள் இலக்கு நோக்கி எழுத்தை ஆள்பவர்களும் அல்லர். அதனால் எழுத்தாளர்களும் அல்லர். (மாறாக, நவின படைப்பாளிகள் எனலாம்)

இவை இரண்டினும் மேலானது, நல்ல இலக்கியப் பார்வையை.. தெளிவை.. நுகர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது.

இது எப்படி இருக்கிறது? உங்கள் கருத்து என்னவோ?

சுப.நற்குணன் said...

//வாசகனுக்கு சிந்திக்கக் கொஞ்சம் இடம் கொடுப்பதுதான் சிறந்த இலக்கியம் என்பார்கள். இதை எழுதியவர் எதை சிந்திக்க வைத்திருக்கிறார் பாருங்கள்..//

வாசகன் சிந்திப்பது இருக்கட்டும்..
முதலில் எழுதியவர் எதை சிந்தித்திருப்பார் என்று சிந்தித்துப் பாருங்களேன்..!

இதைத்தான் 'படைப்பாளியைக் கொன்றுவிடும்' பின்நவின உத்தி என்கிறார்களோ?

பிள்ளையைப் பெற்றெடுத்து வீதியில் வீசுவதற்கும் இதற்கும் எந்த வேறுபாடுமே இல்லை.

குழந்தையை வீசுபவள் பெற்றெடுத்த பொறுப்பிலிருந்து கழன்றுகொள்கிறாள்.. இந்தப் படைப்பை எழுதியவரும் அப்படியே..!

குழந்தையை வீசுபவளுக்கு அருவருப்பான ஒரு காரணம் இருப்பதுபோலவே.. நவின படைப்பாளிக்கும்!

ஆமாம், ஒன்று கேட்கிறேன்..

'படைபாளியைக் கொன்றுவிடும்' இவர்கள் படைப்பின் இறுதியில் தங்கள் பெயரை எழுதுகிறார்களே ஏன்?

தமிழரண் said...

> வணக்கம் ஐயா சுப. நற்குணன். தொடர்ந்து வந்து பல நல்ல கருத்துக்களைப் பகிர்வதில் மகிழ்யுறுகிறேன்.

1. நவின படைப்பு
2. நவின படைப்பாளிகள்

என்ற இந்த 2 விடயங்களை நானும் முற்றிலும் ஏற்கிறேன். ஏனெனில் இவர்கள் எழுதுவது இலக்கியமே இல்லை. நாம் தொடர்ந்து புத்திலக்கியம், எழுத்தாளார் என்ற சொல்லால் நவின படைப்பாளிகளைச் சுட்டும் போது, அஃது த்மிழ் இலக்கியம் என்ற சொல்லிற்கே பெரும் இழுக்காக அமைந்துவிடுகிறது. இனி நாம் எல்லாரும் நவின படைப்பு, நவின படைப்பாளிகள் என்றே அழைப்போம்.

//வாசகன் சிந்திப்பது இருக்கட்டும்..
முதலில் எழுதியவர் எதை சிந்தித்திருப்பார் என்று சிந்தித்துப் பாருங்களேன்..!//

முற்றிலும் உண்மை. எழுதியவர்கள் சிந்திப்பதே கிடையாது காரணம் செத்த மூளையில் வந்த சொத்த படைப்புகள் அத்தனையும்.

//'படைபாளியைக் கொன்றுவிடும்' இவர்கள் படைப்பின் இறுதியில் தங்கள் பெயரை எழுதுகிறார்களே ஏன்?//

பெற்றெடுத்ததே யாருக்குப் பிறந்தது என்பதை அறியாமலிருக்கும் பெண்ணுக்கும் இவர்கள் எழுதும் நவின படைப்க்கும் ஒத்துப்போகும். அதனால்தான் கழன்றுகொள்வார்கள் இவர்கள்.

இறுதியில் பெயரை எழுதிக்கொள்வது, ஒரு வேளை இவர்கள் குமுகாயத்தில் தப்பிப்பிறந்த பிறப்புகள் போன்ற நவின படைப்புக் குப்பைகள் நிறைய நிரம்பியபோது, எது தான் போட்ட குப்பை என்று அடையாளங் கண்டுகொள்வதற்காக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

கோவி.மதிவரன் said...

வணக்கம் வாழ்க

நல்லதொரு பயனான பதிவினை வழங்கியிருக்கும் தங்களுக்குப் பாராட்டுகள்.
எப்படி வேண்டுமானாலும் இலக்கியம் படைக்கலாம் என்ற நினைப்பில் பலர் இப்பொழுது புது-புது படைப்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இலக்கே இல்லாமல் இலக்கியம் படைக்கும் இவர்கள் எல்லாம் இலக்கியவாணர்களாம் !!!

தமிழரண் said...

> வணக்கம் கோவி.மதிவரன். தொடர்ந்து வருவதற்கு மகிழ்கிறேன்.

//இலக்கே இல்லாமல் இலக்கியம் படைக்கும் இவர்கள் எல்லாம் இலக்கியவாணர்களாம் !!!//

இனி இவர்கள் இலக்கியவாணர்கள் என்று அழைக்க வேண்டாம். அது நம் இனத்திற்கே இழிவு. நவின படைப்பு, நவின படைப்பாளர் என்றே அழைப்போம். இலக்கியத்திற்கும் இவர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

நன்றி.

அ. நம்பி said...

பூனை கட்டும் இடத்தில் ஆனை கட்டலாமா?

http://nanavuhal.wordpress.com/2009/09/04/vellarikkaay/

`இரு தலைமுறைகளுக்கு முன்னர் தாத்தா சொன்ன இந்தக் கதை இன்றும் செல்லுபடி ஆகும் என்று நினைக்கிறேன்.

ஏனெனில் அந்தச் சிறுவனின் தன்மை கொண்டவர்கள் சிலர் இன்றும் நம் இனத்தில் உள்ளனரோ என்று சில வேளைகளில் எண்ணத் தோன்றுகிறது.'

தமிழரண் said...

வணக்கம் அ. நம்பி ஐயா. தங்களின் வருகை எனக்கு மகிழ்வளிகிறது.

தங்களின் கதையை வாசித்தேன். சிந்திக்க வைத்தது.நல்ல தமிழில் பண்பாகச் சொல்லி, சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகச் சொல்லியுள்ளீர். வாழ்த்துக்கள்.

//ஏனெனில் அந்தச் சிறுவனின் தன்மை கொண்டவர்கள் சிலர் இன்றும் நம் இனத்தில் உள்ளனரோ என்று சில வேளைகளில் எண்ணத் தோன்றுகிறது.//

பல வேளைகளில் எனக்கு எண்ணத் தோன்றுகிறது ஐயா.. புரிந்துகொள்ள வேண்டியவர்களுக்குப் புரிகிறதா என்று பார்ப்போம்..

நன்றி. தொடர்ந்து வருக.