Thursday 26 August 2010

தமிழனுக்கு மணி அடிக்க தெரியாதா??

தமிழன் உயர்ந்தவன். உயரிய நாகரிகம் கொண்டவன். மெய்யறிவு கண்டவன். பல நாடுகளை வென்றவன். பல அரிய செயற் புரிந்தவன். ஆனால் அவனுக்குக் கோயில் மணி அடிக்க தெரியாமல் போயிற்றாமே?? மந்திரம் ஓத தெரியாதாமே?? மந்திரம் சொல்லக் கூட தகுதியற்றவனாமே?? இவை மெய்யோ?

ஐயா மதுரை இளங்குமரனார் அவரின் உரையின் வாயிழாக எனக்குள் எழுந்த சிந்தனையின் சாறே இக்கட்டுரை. ஐயா அவர்தம் உரையில் கூறுகையில், தமிழன் கற்பாறைகளைப் பிளந்து அவற்றை இழுத்து, சுமந்து, செதுக்கி, அடுக்கி, வாயில் கட்டி, குளம் தோண்டி, கோபுரம் எழுப்பி மிக நேர்த்தியான கோவில் கட்டினான். இத்தனை வேலையையும் தமிழன் செய்தான்; செய்யத் தெரிந்திருந்தது ஆனால் கடைசியில் மணி அடிக்கும் வேலையை மட்டும் ஆசிரிய பார்ப்பன் கையில் கொடுத்துவிட்டானே! இது தமிழரின் வீழ்ச்சியில்லையா?? என மன நெகிழ வினவினார். மானமுள்ள தமிழர்களுக்குச் சுருக்கென குத்தியிருக்கும். 

இத்தனை கலைவேலைபாடுகளைத் திறம்படச் செய்த தமிழன் கடைசியில் மணி அடித்துப் பூசை செய்யத் தெரியாதவனாகிய மடமை எதுவோ, அதுவே தமிழர்களின் வீழ்ச்சி! எந்த ஆரிய பார்ப்பனன் உழைத்துப் பணம் கொடுத்துக் கோவிலைக் கட்டச் சொன்னான்? ஒருவனும் இல்லை. பணந் தமிழனுடையது. உழைப்புத் தமிழனுடையது. கட்டுந் திறம் தமிழனுடையது. ஆனால் கோவில் உள்ளே மணி அடிப்பது பூசனைச் செய்வது சமற்கிருதத்திலும் பூசாரியாக ஆரிய பார்ப்பன். அக் காலத்தில்தான் நம் தமிழ் வேந்தர்களின் அறியாமையால் இந்த தமிழினம் வீழ்ந்தது. இன்றுதான் எந்தத் தமிழப் பேரரசனுக்கோ சிற்றரசனுக்கோ ஒரு கைப்பிடி மண்ணுக்கூட சொந்தமில்லாமல் போயிற்றே, பின் ஏன் இன்னும் தமிழன் ஆரியனுக்கும் சமற்கிருதத்திற்கும் அடிமைப்பட்டே வாழ்கிறான்? 


’தமிழன் கட்டிய கோவிலில் தமிழில் மட்டுமே மந்திரம் ஓது!’ என என்று எல்லாத் தமிழனும் கட்டளை இடுகிறானோ அந்நாளை தமிழரின் எழுச்சி நாளாகத் திகழும் என்பது என் திடமான உறுதி! ஏனெனில் தமிழரின் வீழ்ச்சியனைத்தும் கோவிலிருந்தே தொடங்குகின்றன. என்று தமிழ்மொழியை நீச மொழியென்றும்  அது வழிபடுபதற்குத் தகுதியற்ற மொழியென்றும், அதைப் பேசுவோன் தாழ்ந்தோனே எனும் கருத்துப் பரப்பப்பட்டதோ; என்று அதைத் தமிழன் அறியாமையால் ஏற்கத் தொடங்கினானோ அன்றே அவன் வீழத் தொடங்கினான். இது வரலாறு சொல்லும் பாடம் நமக்கு.

கோவிலில் தமிழ் மொழியைச் சமற்கிருதத்திற்குப் பலி கடாவாக ஆக்கினான். அதனால் தமிழன் தன் மொழி, இனம் மேல் நம்பிக்கை இழந்தான். மெல்ல மெல்ல ஆரியன் சூழ்ச்சியால் அத்தனையும் பல நூற்றாண்டுகளாக ஒன்றொன்றாக இழந்தான். இன்று தமிழைத் தவிர தமிழன் கையில் வேறேதுவும் இல்லை. 

இத் தமிழினம் இனி எழ வேண்டுமெனில், வீழ்ந்த அவ்விடத்தினிலிருந்தே எழ வேண்டியுள்ளது. நீங்கள் செல்லும் ஒவ்வொரு கோவிலிலும் தமிழில் மட்டுமே மந்திரம் ஓதச் சொல்லிக் கேளுங்கள். தமிழர் கோவிலில் தமிழர்களே அனைத்துப் பொறுப்பிலும் இருப்பதை நிருவாகத்தினர் உறுதிச்செய்யுங்கள். குடமுழக்கு விழாவிலிருந்து அனைத்து சமய விழாக்களையும் புராண பொய்ப்புகட்டில்லாமல் அறிவார்ந்த நிலையில் கொண்டாடுங்கள். பொருள் அறிந்து வேண்டிய சடங்குகளைச் செய்யுங்கள். கோவில் பூசாரிகள் தமிழை மட்டுமே, தமிழர் சமயத்தைப் பற்றி மட்டுமே, தமிழ சமய குருமார்கள் பற்றிய மட்டுமே மக்களிடம் உரையுங்கள். 

வாழும் இந்தத் தமிழருக்குச் ’செத்த மொழியான சமற்கிருதமாம்’ ஒரு போதும் வாழ்விக்காது! அறப் பயன் எதையும் தராது! மாறாக தமிழரின் அறிவைக் குன்ற மட்டுமே செய்யும். 

No comments: