Tuesday 18 August 2009

செத்த நேரம் - மறுப்பு 3


இத் தொடரில் பேச்சு வழக்கைப் (பிறமொழி கலப்பின்றி பேசுவது) படைப்பிலக்கியத்திலும், கட்டுரையிலும் பயன்படுத்தி வந்தால் ஏற்படும் விளைவுகளை ஆராயப்படுகிறது. அடுத்த தொடரில் பிறமொழிகளைக் கலந்து எழுதுவதனால் ஏற்படும் விளைவுகள் ஆராயப்படும். அவ்வகையில் இத் தொடருக்கு ஏதுவாக அமைந்த சொல்லாய்வுநர் முனைவர் கு.அரசேந்திரனாரின் தமிழறிவோம் தொகுதி 2 நூலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரையை இங்கே பதிவு செய்துள்ளேன்.


//குறும்பு செய்யும் குழந்தைகளிடம் பாட்டி பேசுகிறார், ‘செத்த நேரம் சும்மா இருக்கக்கூடாதா’ என்று. அமைதியிழந்து பழகும் நண்பர்களிடம் ‘செத்த நேரம் பொறுமையாய் இருக்கவும்’ என்கிறோம்.


‘செத்தநேரம் என்ற சொல்லை அப்படியே பிரித்துப் பார்த்தால், பொருளெதுவும் சரியாகத் தெரியவில்லை. செத்துப் போவதாகிய நேரம் என்றேல்லாம் இங்குப் பொருள் கொள்ள வாய்ப்பில்லை.


‘சற்று நேரம்’ என்ற செவ்வழக்குச், சற்றுநேரம் – சத்துநேரம் – சத்தநேரம் – செத்தநேரம் என்றாயிற்று.


முற்றியது – முத்தியது போலவும் விற்றது – வித்தது போலவும்தான் சற்று என்பது சத்து, சத்த என்றானது. இந்தச் சத்தச் சொல்தான் ‘செத்த’ என்று மேலும் மாறிற்று.


பலா – பெலா எனப் பேச்சு வழக்கில் மாறும். இங்கு ‘அ’ கரம் ‘எ’ கரமாகக் காண்கிறோம். இதேவகையில்தான், சத்த – செத்த என்றானது.


‘சல்லிவேர்’ மிகச்சிறிய வேரைக் குறிக்கும். அவன் சல்லிக் காசிற்கும் பொறான் என்பதில் உள்ள’ சல்லி’, சிறிய காசினைக் குறிக்கும். உடைந்த பெருங்கற்களின் சிறுதுண்டு, கருங்கற்சல்லி. இவ்விடங்களில் ‘ சல்’ கள் யாவும் சிறியதென்னும் பொருளினதே.


முன்சொன்ன இதே ‘சல்’ தான், சிறிது என்னும் பொருள் தரும் சற்றுச் சொல்லைச் சல்+து-சற்று என்று பெற்றளித்தது. இந்தச் சற்றுவே பிறகு சத்த – செத்த எனத் திரிவதாயிற்று.


புதிய முற்போக்கினர் எனத் தம்மைக் காட்டிக்கொள்ளும் ஆழப்பார்வையற்ற சிலர், மொழியை, மக்கள் பேச்சு வழக்கின் படியே பேசவேண்டும், எழுத வேண்டும் என்று கூறிவருகின்றனர். இந்த நிலையை எல்லாரும் பின்பற்றினால், செவ்வழக்குகள் யாவும் இல்லாமற் போய்விடும். அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால், பிறகு, கொச்சை வழக்குகட்கு உரிய பொருளை மூல வழக்குகள் எவற்றுடனும் ஒப்பிட்டு அறியமுடியாத நிலை ஏற்பட்டுவிடும். அதன்பிறகு, இந்தச் செத்தநேரச் சொல்லைச் சற்று நேரமல்ல; எவ்வளவு நேரம் ஆய்ந்தாலும் பொருளறிய முடியுமா? // - தமிழறிவோம் தொகுதி 2


இழு என்னும் செவ்வழக்குப் பேச்சுவழக்கில் ‘இசு’ என்றும் பேசுவோர் உண்டு. வாழைப்பழத்தை வாளப்பளம், வாயப்பழம், வாலேப்பழம் என்றும் பேசுவோரும் உண்டு. ஆக, இது பேசுவோரின் தன்மை, வட்டாரம், கல்வியறிவு ஆகியவற்றிற்கு ஏற்ப வேறுபட்டு திரிகிறது. மக்கள் எவ்வாறு பேசினும், தமிழறிவுடையோர் அதைத் திருத்திப் பேசவே சொல்கின்றனர். ‘தண்ணீர் ஊற்றினேன்’ எனும் தொடரை, உரையாடும் போது ‘தண்ணீ ஊத்துன’ என்கிறார்கள். ‘என்னைப் பற்றி’ எனும் தொடரை ‘என்ன பத்தி/பட்ரி’ என்று பேசுகிறார்கள்.


இன்னும் சொல்லப்போனால் நாம் செந்தமிழ் என்று நினைத்திருக்கும் பல சொற்கள் செவ்வழக்கினின்றும் திரிந்ததே ஆகும். எடுத்துக் காட்டாக நன்செய் > நஞ்சை என்றும், வெயில் > வெய்யில் என்றும், முன்தானை > முந்தானை என்றும், கூடு > கூண்டு, சீயக்காய் > சீக்காய் என்றும் > கொட்டாங்காய்ச்சில் > கொட்டாங்கச்சி என்றும், சீதப்பழம் > சீத்தாப்பழம், என்றும் தவறாகப் பேசியும் எழுதியும் வருகின்றோம்.


வாழைப்பழம் எனும் சொல்லைப் பொதுவாகப் பல மாணவர்கள் ‘வாளப்பழம்’ என்றுதான் சொல்வர். அதைக் கேட்டத் தமிழாசிரியர் அவ்வாறு பேசுவதைத் திருத்தி ழகரத்தைச் சரியாக உச்சரிக்கவும் சொல்லித் தருவார். இவ்வாறான மாசை நீக்குபவர்தானே ஆசிரியர்? இச்சூழ்நிலையில் பேச்சுவழக்கை போய் எவ்வாறு மாணவர்களிடம் எழுத்தில் பயன்படுத்தச் சொல்ல இயலும்.


சிலர் சொல்வதுபோல் மாணவன் ஒருவன் படைப்பிலக்கியத்தில் “நா ரெண்டு வாலேபளம் சாப்புட்டே” என்று எழுதுகிறான் என வைத்துக்கொள்வோம். மாணவன் பேச்சு வழக்கில் அப்படித்தான் பேசுவான், அதனால் அவன் அப்படி எழுதுகிறான். இதைப் படித்த ஆசிரியர் சரியென்று என்பாரா? அல்லது பிழை என்பாரா? சரி என்றால், அரைகுறை தமிழ் பேசவும், எழுதவும் தெரிந்தால் போதும், எல்லா மாணவர்களும் படைப்பிலக்கியத்தில் மிகச் சிறந்த புள்ளிகளைப் பெற்றுவிடலாம் என்றே நினைக்கிறேன். ஏனெனில் படப்பிலக்கியத்தில் எவ்வளவு பேச்சுமொழியை எழுதலாம், அல்லது எவ்வளவு உரையாடல்களைப் பேச்சுவழக்கைப் பயன்படுத்தி எழுதலாம் என்பதற்கு வரையறை கிடையாதே! ஆகவே மாணவனுக்கு எந்தச் செந்தமிழ் சொற்களும் தெரியாமல் போனாலும் அவன் உடனே பேச்சுவழக்குச் சொல்லை எழுதித் தப்பித்தும் கொள்ளலாம்; புள்ளியும் பெற்றுக்கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.


படைப்பிலக்கியத்தில் இவ்வளவு பெரிய ஓட்டை இருப்பதால்தான் என்னவோ அரைகுறை தமிழ் படித்த யாவரும் ‘நவின இலக்கியம்’ படைப்பதற்கு முந்துகின்றனரோ?


எந்த விளையாட்டை எடுத்துக்கொண்டாலும், அதற்கென்று ஒரு விதிமுறை இருக்கிறது. எடுத்துக்காட்டாக பூப்பந்து விளையாட்டு. நம் வீட்டின் முன் தெருவில் விளையாடும்போது எந்த விதிமுறையின்றியோ, வலையின்றியோ, ஏன் புள்ளி கணக்கெடுப்பின்றியோ கூட விளையாடலாம்; மகிழலாம். அதை யாரும் தப்பு என்று சொல்லிவிடலாகாது. ஆனால் அதே பூப்பந்து விளையாட்டை ஒரு போட்டியில் விளையாடும் போது எனக்கென்று ஒரு விதிமுறையை உருவாக்கிக் கொண்டோ அல்லது என் விருப்பம் போலவும் விளையாட முடியாது. ஆகவே என் விளையாட்டுத் திறனை அவ் விளையாட்டு விதிமுறைகளுக்குட்பட்டே வெளிபடுத்த முடியும். இவ்விதிமுறைகளைப் பின்பற்றி எவன் சிறந்த விளையாட்டுத் திறனை வெளிபடுத்துகின்றானோ அவனே சிறந்த ஆட்டக்காரன். அவனைத்தான் உலகமும் புகழும். அதே போன்றுதான், படைப்பிலக்கியம் படைக்க விழைவோர், தமிழ் இலக்கிய மரபு, தமிழ் இலக்கண மரபு, தமிழ்ப் பண்பாட்டு மரபு, தமிழ்ச் சமய மரபு, தமிழின மரபு ஆகியவற்றிற்கு உட்பட்டே எழுத வேண்டியிருக்கிறது. இவற்றைப் பின்பன்றுவது ஒவ்வொரு படைப்பாளியின் முகாமை பொறுப்பாகும். இவ்வாறு மரபு மீறாமல் எழுத வல்லவன் யாரோ, அவரே சிறந்த படைப்பாளராவார். அவரின் படைப்பே நிலைத்திருக்கும். அவரின் படைப்பே இலக்குடைய இலக்கியமாகும். அந்த இலக்கியமே தமிழர்களின் நல்வாழ்வுக்குத் துணைநிற்கும். அந்தப் படைப்பாளியையே உயர்ந்தோர் என்றும் போற்றியும் புகழுவர்.


சிறுகதை, புதினம் ஆகிய படைப்புகளைப் படைக்கும் போது உரையாடல்களைப் பயன்படுத்தி எழுதுவது இன்றியமையாததாகும். உரையாடல்களைப் பயன்படுத்தும் போதே அப்படைப்பிற்கு உயிரோட்டாம் இருக்கிறது என்று படைப்பாளர்கள் கூறுகின்றனர். இக் கூற்றை வெறுமனே மறுத்தலும் இயலாத ஒன்றுதான் என நினைக்கிறேன். நன்கு தமிழ்கற்ற தமிழறிஞரும், இலக்கிய படைப்பாளியான மு.வரதராசனாரும் பேச்சுமொழியை உரையாடல்களில் பயன்படுத்தி புதினங்களில்(நாவல்) எழுதியிருக்கிறார். அவர் பயன்படுத்திய பேச்சுமொழி நடையை மிக நுட்பமாக தக்க இடத்தில் அவசியம் நேரும் இடத்திலே பயன்படுத்திருக்கிறார். ஆனால் மு.வாவின் படைப்பைக் கூட வாசிக்காதப் புத்திலக்கியவாணர்கள் இன்று இவ்வாறு எழுதுகின்றனர்? கவிதையில் பேச்சுமொழி, கட்டுரையில் பேச்சுமொழி, கதைகளில் சொல்லவே வேண்டுவதில்லை. நிரம்ப உரையாடல்களும், வருணனைகளும் பேச்சுமொழியிலும், பிறமொழிகலப்பிலும் எழுதிவருகின்றனர். கதை என்று சொல்வதைவிட உரையாடல் என்றே சொல்லலாம் போல.


பேச்சுவழக்கை ஒருவாறு படைப்பிலக்கியத்தில் பயன்படுத்த ஏற்பு வழங்கினாலும், மு.வாவைப் போன்று எத்தனைப் பேர் அச் சலுகையைச் சரியான நோக்கத்துடனும், நுட்பமாகப் பயன்படுத்துவர் என்பது வினாவே. இச் சலுகையைத் தவறாகவே ஆளப்படுவதை இற்றைய படைப்பிலக்கியம் நமக்கு காட்டுகிறது. பண்பாடற்ற பாமரன் பேசுவதையும் அப்படியே எழுதுகிறார்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணம், கதை மாந்தரை உயிரோட்டமாகக் காட்டுகிறார்களாம். அப்போதுதான் வாசகர்ளால் கதையை உய்துணர முடியுமாம். அப்படியென்றால், ‘சன் மியூசிக்கு’ அலைவரிசியில் பணிபுரியும் ஒருவரைக் கதைமாந்தராக்கிக் கதை புனைவார்களானால், “பிரிவியூஸ் கோலர்காக நல்ல சோங் பார்த்தும், அடுத்து நெக்ஸ் கோலருக்குப் போவோம்”, என இப்படித்தான் எழுதித் தள்ளுவார்களா புத்திலக்கியவாணர்கள்? இதற்குப் பெயர்த்தான் உயிரோட்டம் என்பதா?


கதைமாந்தர்களை இயல்பாக படைக்க பேச்சுமொழியை ஆங்காங்கே கையாள வேண்டுவது அவசியம் என்பதால், அதன் விளைவுகளை அறிந்து எத்துணைப் புத்திலக்கிலக்கியவாணர்கள் அளவறிந்து பேச்சுமொழியைப் பயன்படுத்த தலைபடுவர்?


உண்மையிலே ஒரு தீய பழக்கமுடைய கதைமாந்தரை கதையில் இடம்பெறச்செய்தாலும், அவன் எப்படி பேசுவனோ, அதை அப்படியே எழுதி அவன் இயல்பைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது. சிறந்த படைப்பாளர் நல்ல மொழியைப் பயன்படுத்தியே அந்த தீய பண்புடைய கதைமாந்தனின் இயல்பை தன் எழுத்துத் திறத்தால் காட்டிவிடுவார். அவரையே எழுத்தாற்றல் மிக்கவர் எனக் கொள்ளத்தகும். அதை விடுத்து அவன் பேசுவதை அப்படியே பச்சை பச்சையாகவும் கொச்சை கொச்சையாகவும் எழுதினால் பின்பு எழுத்தாளனின் எழுத்துத் திறனுக்கு என்னதான் வேலை இருக்கிறது? இதை எழுதுவதற்கு ஓர் எழுத்தாளன் தேவையா?


பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின் குறள் 475


மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப் பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவுகடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும் என்பது குறள் உணர்த்தும் மெய்ப்பொருள். ஆகவே இதன் உண்மையை உணர்ந்து புத்திலக்கியவாணர்கள் பேச்சுமொழியைப் படைப்பிலக்கியத்தில் மட்டும் அதுவும் மிகவும் அரிதான இடங்களில் பண்பாட்டொடு ஒட்டி எழுத வேண்டும்.


இவ்வுண்மையை உணராமல், மதம்பிடித்த யானைகள் போல் பேச்சுமொழியை எந்தவொரு வரையறையும் இன்றி எழுதிக்கொண்டிருந்தால் ஏற்படும் விளைவு என்னவாகத்தான் இருக்கும்? அதன் விளைவை வரலாறு நமக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்த்திவிட்டது.


அடுத்த தொடரில்.


நன்றி.


மேற்கொள் நூல்கள்.


தமிழ் இலக்கிய வரலாறு மு. வரதராசனார்.

தமிழறிவோம் தொகுதி 2 முனைவர், கு.அரசேந்திரன்

சொல்லும் பொருளும் -

8 comments:

Unknown said...

//சிறந்த படைப்பாளர் நல்ல மொழியைப் பயன்படுத்தியே அந்த தீய பண்புடைய கதைமாந்தனின் இயல்பை தன் எழுத்துத் திறத்தால் காட்டிவிடுவார். அவரையே எழுத்தாற்றல் மிக்கவர் எனக் கொள்ளத்தகும். அதை விடுத்து அவன் பேசுவதை அப்படியே பச்சை பச்சையாகவும் கொச்சை கொச்சையாகவும் எழுதினால் பின்பு எழுத்தாளனின் எழுத்துத் திறனுக்கு என்னதான் வேலை இருக்கிறது? இதை எழுதுவதற்கு ஓர் எழுத்தாளன் தேவையா?//
உண்மைதான் .. அம்மி கொத்த சிற்பி எதற்கு? என்று கேட்ட கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவுக்கு வருகிறார். அருமை அருமை.

தமிழரண் said...

வணக்கம் சுரேசு குமார்.

தங்களின் கருத்துக்கு நன்றி. தொடர்ந்து வருக.

சுப.நற்குணன்,மலேசியா. said...

//பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் குறள் 475

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப் பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவுகடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும் என்பது குறள் உணர்த்தும் மெய்ப்பொருள். ஆகவே இதன் உண்மையை உணர்ந்து புத்திலக்கியவாணர்கள் பேச்சுமொழியைப் படைப்பிலக்கியத்தில் மட்டும் அதுவும் மிகவும் அரிதான இடங்களில் பண்பாட்டொடு ஒட்டி எழுத வேண்டும்.//

நானும் வழிமொழிகிறேன்.

உங்களிடமிருந்து நல்ல படைப்புகள் வருகின்றன. உண்மையில் மிகவும் பயனான - தெளிவான விளக்கம். மிக்க நன்றி உங்களுக்கு.

உங்கள் தமிழ்ச்சேவை தொடரட்டும்.

தமிழரண் said...

வணக்கம். சுப. நற்குணன் ஐயா அவர்கள் தொடர்ந்து வருவதற்கு மிக்க நன்றி. தாங்கள் போன்றோர்களின் ஊக்கமே என்னை இன்னும் முனைப்பாகச் செயல்பட வைக்கிறது.

நன்றி.

Anonymous said...

அருமையான படைப்புகள்...
நல்ல பல செய்திகளைத் தொகுத்ததற்கு நன்றி.
இன்னும் படிக்க விரும்புகின்றேன். எழுதுங்கள்.

இவ்வண்ணம்,
இனியன்,
பினாங்கு.

தமிழரண் said...

வணக்கம் இனியன்.

தொடர்ந்து வருக. நன்றி.

sarath said...

நீங்கள் சொன்ன எல்லாக் கருத்துகளும் ஏற்புடையவையே.

எழுதும் போது நிச்சயம் நல்ல தமிழ் வேண்டும். பேசுவது பெரும்பாலும் தவறான சொல் வழக்காக இருப்பதால் அதை அடிப்படையாக கொள்வதை எந்த மொழி வல்லுனரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

தமிழரண் said...

வணக்கம் சாரத்து ஐயா,தங்களின் வருகையில் மகிழ்கிறேன்.

//எழுதும் போது நிச்சயம் நல்ல தமிழ் வேண்டும். பேசுவது பெரும்பாலும் தவறான சொல் வழக்காக இருப்பதால் அதை அடிப்படையாக கொள்வதை எந்த மொழி வல்லுனரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.//

மிகச்சரியாகச் சொன்னீர். இந்தத் தெளிவைச் சொன்னால் புத்திலக்கியவாணர்கள் கோபித்துக் கொள்கிறார்கள் ஐயா.